உலக வங்கியினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு செய்ய வடக்கு மாகாண சபை தீர்மானித்துள்ளது.
வட மாகாண சபையின் 65வது அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், நிதி குற்றவியல் விசாரணை பிரிவுடன் கணக்காய்வாளர் நாயகத்திற்கும் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
நெல்சிப் திட்டத்தின் கீழ் பருத்துறை பிரதேச சபை மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை ஆகியவற்றில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு 3 பேர் கொண்ட குழு, மாகாண சபையால் நியமிக்கப்பட்டிருந்தது.
அந்த குழு, தமது அறிக்கையை இன்றைய தினம் சபையில் சமர்பித்த நிலையிலேயே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு உள்ளுராட்சி மன்றங்களிலும் சுமார் 43 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.