ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணையில் செல்ல விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கின் நான்காவது மற்றும் ஐந்தாவது சந்தேகத்துக்குரியவர்கள் இன்றைய தினம் அவிசாவளை மேல்நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்னவினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தலா 10 லட்சம் ரூபா ரொக்க பிணையிலும், 30 லட்சம் சரீர பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் கடந்த 24 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் அதற்கு முன்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.