வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர்!எவ்வாறு ஆவா குழுவால் சுதந்திரமாக இயங்கமுடியும்?

284 0

cmவடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில், ஆவா குழு என்ற பெயரில் செயற்படும் சட்டவிரோத ஆயுதக் குழு எவ்வாறு சுதந்திரமாகச் செயற்படமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்?

மேலும், இந்த ஆவா குழுவை இராணுவத்தினரே உருவாக்கி செயற்படுத்துகின்றார்கள் எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இந்த ஆவா குழு யார்? இதன் பின்னணி தொடர்பாக விரிவான விசாரணை நடாத்தப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணப் பல்லைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டபின்னர் ஆவா குழுவானது தென்பகுதியிலும் அனைவராலும் பேசப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இக்குழு தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஆவாக்குழு சம்பந்தமாக எல்லோருமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். யார் இந்த ஆவா குழு என்பது பற்றி ஒருவருக்கும் சரியாகத் தெரியவில்லை. இராணுவத்தினர் தான் முதலில் ஆவாக்குழு பற்றி குறிப்பிட்டிருந்தார்கள்.

இப்பொழுது கூறுகின்றார்கள் அதனைத் தொடக்கியதும் இராணுவம், அதனை முன்னெடுத்து செல்வதும் இராணுவம் என்ற கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இவை சம்பந்தமாக எந்தவிதமான கருத்துக்களையும் முடிவாக என்னால் கூற முடியாது உள்ளமைக்கு காரணம் விசாரித்து அறியப்பட வேண்டிய விடயம்.

ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்தைச் சொல்லும் போது எங்களால் எது சரி என்று கூற முடியாது. ஆனால் யாரோ ஒரு குழுவினர் சில சில வேண்டப்படாத நடவடிக்கையிலே ஈடுபட்டு வருகின்றார்கள். அவற்றை தடுக்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பது உண்மை.

என்னுடைய கேள்வி என்னவென்றால் வட மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை 2009 ஆம் ஆண்டு வரை இல்லாமல் இருந்தது. அதற்குப் பின்னர் மிகவும் கூடிய விதத்தில் அந்த விநியோகம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதைவிட பாராதூரமான குற்றச்செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வடமாகாணத்தில் 1 இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் குடிகொண்டிருக்கும் போது, எங்களுடைய பாதுகாப்புக்காக இங்கு இருக்கும் போது இவையெல்லாம் நடைபெறுவது எங்களுக்கு விசனத்தை ஏற்படுத்துகின்றது. வியப்பையும் ஏற்படுத்துகின்றது.

ஆகவே நீங்கள் ஆவாக்குழுவை யார் செய்கின்றார்கள் யாருடைய ஒத்தாசையுடன் செய்கின்றார்கள், யார் பின்னணியில் இருக்கின்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இவ்வாறான சூழலிலே எவ்வாறு இவையெல்லாம் நடைபெறுகின்றது என்பதே எமது கேள்வி எனத் தெரிவித்தார்.