சிறீலங்கா இராணுவத்தினர் வடக்கு மாகாணத்தில் நடாத்திவரும் சிகையலங்கரிப்பு நிலையங்களை மூடுமாறு கோரிக்கை விடுத்துள்ள சிகையலங்கரிப்பாளர்கள் அதற்கு ஒரு மாதகால அவகாசமும் வழங்கியுள்ளனர்.
வவுனியா முத்தையா மண்டபத்தில் இன்று இடம்பெற்ற வடமாகாண சிகை அலங்கரிப்பாளர் சங்க பொதுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிகை அலங்கார சங்கத்தின் தலைவர் கே. நாகராசா தெரிவித்தார்.
இப்பொதுக்கூட்டத்தில் வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த சிகையலங்கரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
பம்பைமடு, மாந்தை மேற்கு, கிளிநொச்சி, பூநகரி, கண்டாவளை, ஓமந்தை, நாம்பன்குளம், பள்ளமடு ஆகிய இடங்களில் சிறீலங்கா படையினர் சிகையலங்கரிப்பு நிலையத்தை நடாத்தி வருவதாகவும், இதனால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகையலங்கரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பொதுமக்களின் சிகையலங்கரிப்பு நிலையங்களை விட இராணுவத்தினர் குறைந்த விலைக்கு சிகையலங்கரிப்புச் செய்வதால், தமது தொழில் பாதிப்படைவதாக வடக்கு மாகாண கட்டளைத் தளபதிக்கு தெரியப்படுத்தியும் அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் விசனம் தெரிவித்துள்ளார்.