கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்குச் சொந்தமான காணியை தனியாருக்கு வழங்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இதன்போது காணியை அளவீடு செய்யச்சென்ற உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்துத் திரும்பிச் சென்றனர்.
கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியிலுள்ள உதிரைவேங்கை வைரவர் ஆலயத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் காணியை, தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்கில் நில அளவை செய்வதற்காக குறித்த பகுதிக்குச் சென்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
உதிரைவேங்கை ஆலயத்தின் காணி 60 வருடங்களாக ஆலயத்திற்குரிய காணியாகக் காணப்படும் நிலையில், அக்காணியை தனியார் ஒருவர் உரிமைகோரி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த காணியை பிரதேச செயலகத்தினரால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைய தனியாருக்கு வழங்கும் நோக்கில், அளவீடு செய்ய முற்பட்ட சமயம் பொது மக்களின் எதிர்ப்பையடுத்து அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்ட நிலையில், நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.