கிளிநொச்சியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பொதுச் சந்தை கடைத் தொகுதியை வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கடைத் தொகுதியை வட மாகாண முதமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், இன்று மாலை 4.00 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் பதினாறாம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால் முற்றாக எரிந்த கிளிநொச்சி பொதுச் சந்தையை மறுநாள் 17 ஆம் திகதி பார்வையிட்ட வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், மிக விரைவில் குறித்த சந்தையை இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு ஆவண செய்வதாகக் கூறிச் சென்றார்.
இதன் பிரகாரம் கரைச்சிப் பிரதேச சபையினால் வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் தீ விபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கு செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி ஒன்பது மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இவ்வாறு ஒதுக்கப்பட்ட ஒன்பது மில்லியன் ரூபாவைக் கொண்டு 45 தற்காலிகக் கடைகள் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையினரால் அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அமைக்கப்பட்ட குறித்த கடைத் தொகுதியை வடமாகாண முதமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், இன்று மாலை திறந்துவைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் வடமாகாண முதமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம், தவநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள், கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.