தற்கொலை அங்கியுடன் தொடர்புடைய பிரதான நபரை எனக்குத் தெரியும்! -சயந்தன்!

309 0

sayanthanசாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கியுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை எனக்கு தெரியும்.  ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.சயந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது எனவும் அதிர்ச்சிகரமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலக திறப்பு விழா சாவகச்சேரியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். நான் சொல்லவரும் இரு விடயங்கள் நம்பக் கடினமானதாக இருக்கலாம், ஆனால் இவை மிகவும் பாரதூரமான விடயம் . முதலாவது விடயம் கடந்த காலங்களில் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்புபடுத்த வேண்டுமென கேட்டவர்கள் கட்சியில் வந்து சேரக் கேட்கிறார்கள். அவர்களை பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதை விட மிக முக்கியமான விடயம், சில மாதங்களுக்கு முன்னர் சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி ஒன்று மீட்கப்பட்டது. இது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அதன் பின்னால் உள்ள அரசியல் யாருக்கும் தெரியாது. அது விசாரணை நிலையில் இருப்பதால் வெளியிடப்படவில்லை. ஆனால் நான் ஒரு விடயம் கூறவேண்டும்.

அந்த தற்கொலை அங்கியை ஒரு இடத் தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு கடத்திய பிரதான சூத்திரதாரி இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் சாவகச்சேரியில் இருக்கின்ற என்னுடைய அலுவலகத்துக்கு நேரெதிரே உள்ள வீட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு பெண்ணை தங்க செய்துள்ளார்.

அத்தோடு அங்கு தங்கியிருந்து இருந்து எமது கட்சிப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந் திரன் அடிக்கடி வந்து போகும் இடமான எனது கட்சி அலுவலகத்தை அடையாளம் கண்டும் வேவு பார்க்கப்பட்டுள்ளது. இது உண்மையான பாரதூரமான விடயம். இவற்றில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் உறுப்பினர் சயந்தன் தெரிவித்தார்.