தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அடையப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் ராஜாங்க அமைச்சர் ப்ரோன்ஸ் அன்லேயை இந்த சந்தித்தபோது இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுவதை வலியுறுத்தினார்.
கொழும்பில் உள்ள பிரித்தானியா உயர்ஸ்தானிகரத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது
வடக்கில் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையீடுகள், இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையின்போது விளக்கிக்கூறப்பட்டதாக கூட்டமைப்பின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
பொதுமக்களின் காணிவிடுவிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சம்பந்தன், பிரித்தானிய அமைச்சரிடம் விபரித்ததுடன், காணி விடுவிப்புக்கள் துரித கதியில் இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.
நல்லிணக்கத்துக்கான இலங்கையின் பயணத்தில் பிரித்தானியாவின் பங்கும் சர்வதேச கண்காணிப்பு பங்கும் தொடரவேண்டும் என்றும் சம்பந்தன், பிரித்தானிய ராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளுக்கு பிரித்தானியாவின் ஆதரவு தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்;டார்.
இந்தநிலையில் அரசியல் அமைப்பு உருவாக்கம், நல்லிணக்கம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் என்று பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் உறுதியளித்ததாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.