தமிழ் மக்கள் குறித்து சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு அதிகாரம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வீ.ஆனந்தசங்கரி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீவிரம் காட்டியுள்ளது.
இந்நிலையில், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபுணர்கள் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடியிருந்தது.
இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் ஆரதவுடன் பெற்றி பெற்று, 22 ஆசனங்களை கைப்பற்றிக் கொண்டது.
இதனை கூட்டமைப்பின் ஜனநாயக ரீதியான வெற்றியாக கருத முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, புதிய குழு ஒன்றை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகளின் பின்புலம் இல்லாதவர்களை சந்தித்து கலந்துரையாட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.