’ஆயுதங்களை கையளிக்குமாறு இராணுவம் எச்சரிக்கை’

297 0
அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் இராணவத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் ஆயுதங்களை மீளக் கையளிக்க முடியுமெனத் தெரிவித்த இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க, ஆயுதங்களை கையளிக்காதோர் கைதுசெய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பிலுள்ள இராணுவ ஊடக மய்யத்தில்,  இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,  இம்மாதம் 5 ஆம் திகதி முதல்  12 திகதி வரையான  பொது மன்னிப்புக்  காலப்பகுதியில்,  இராணுவத்திலிருந்து முறையற்ற விதத்தில் விலகிச் சென்றவர்கள் மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், சேவையில் இணைந்துகொள்ள விரும்பாதவர்கள் தங்கள் வசமுள்ள ஆயுதங்களை,  அருகிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் கையளித்துவிட்டு   சட்டரீதியாக விலகிக்கொள்ள முடியுமெனத்  தெரிவித்த அவர், விரைவில் ஆயுதங்களை மீளக் கையளிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

மேற்படி வேண்டுகோளை நிராகரித்துவிட்டு,  பொதுமன்னிப்புக் காலம் முற்றுபெரும் வரையில் ஆயுதங்களை மீளக் கையளிக்காமல் இருப்போர், சட்டத்தின் பிரகாரம் குற்றவாளிகள் ஆவர் எனத் தெரிவித்த அவர்,  அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.