இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்துறை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,
இலங்கையில் புதிய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை பிரணாப் முகர்ஜி வெகுவாகப் பாராட்டினார். மேலும், இலங்கையின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஆர்வமுடன் இருப்பதாகவும் பிரணாப் தெரிவித்தார்.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அண்டை நாடுகளையும் வளப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக கூறிய பிரணாப், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இலங்கை பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்தியாவும், இலங்கையும் இணைந்து பெரிய அளவிலான புதிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் பிரணாப் விருப்பம் தெரிவித்தார்.
அவரது ஆலோசனைகளை ஏற்றுக்கொண்ட மைத்திரிபால சிறிசேன, இந்தியா, இலங்கை இடையேயான உறவு பலம் பெற்று விளங்குவதாகக் கூறினார்.
இலங்கையின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு இந்தியா செய்து வரும் உதவிகளுக்காக சிறிசேன நன்றி கூறினார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளார் தெரிவித்தார்.