ஈராக்கின் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மொசூல் நகரில் தலை துண்டிக்கப்பட்ட 100 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மொசூல் பகுதியை முற்றிலும் கைப்பற்ற ஈராக் ராணுவமும், குர்து படைகளும் தீவிரமாக உள்ளன. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து மொசூலின் பெரும்பாலான பகுதிகள் ஈராக் ராணுவத்தின் வசம் வந்து விட்டன. இருந்தாலும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மொசூலில் இருந்து 15 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஹம்மாம் அல்-அலில் நகரத்தின் விவசாய கல்லூரியின் வெளியே ஒரே இடத்தில் குவியலாக பிணம் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.எனவே, ராணுவத்தினர் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தனர். அப்போது அங்கு 100 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன.
மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது அங்கு தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் நிலையில் அங்கிருந்து தப்பி ஓடிய பொதுமக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்று புதைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.இதற்கிடையே, மொசூல் பகுதியில் பாஷிகா நகரம் மற்றும் 5 கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளை ஈராக் மற்றும் குர்து கூட்டு ராணுவம் மீட்டுள்ளது.