மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவாவில் நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில் 3-வது முறையாக அதிபர் ஆகிறார் டேனியல் ஒர்டேகா
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவாவில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபரும், முன்னாள் மார்க்சிஸ்ட் கொரில்லா தலைவருமான டேனியல் ஒர்டேகாவும், வலதுசாரி பி.எல்.சி. கட்சியை சேர்ந்த மேக்சிமினோ ரோட்ரிகசும் பிரதான வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் 21 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணியதிலேயே அதிபர் டேனியல் ஒர்டேகாவின் வெற்றி உறுதியானது. அவர் 71.3 சதவீத வாக்குகள் பெற்று அசைக்க முடியாத முன்னணியில் இருந்தார். ரோட்ரிகசுக்கு வெறும் 16.4 சதவீத வாக்குகளே கிடைத்து இருந்தது. இதன் மூலம் நிகரகுவாவின் அதிபராக தொடர்ந்து 3-வது முறையாக டேனியல் ஒர்டேகா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
70 வயதான இவர் கடந்த ஆட்சியில் பல்வேறு முக்கியமான பதவிகளில் தனது குடும்ப உறுப்பினர்களையே அமர்த்தினார். இது எதிர்க்கட்சிகளிடையே பலத்த எதிர்ப்பை கிளப்பியதுடன், ஒர்டேகா சர்வாதிகார போக்குடன் திகழ்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்து வரும் நிகரகுவாவில் ஒர்டேகா மேற்கொண்ட நிலையான வளர்ச்சிப்பணிகளே அவருக்கு இந்த வெற்றியை தந்திருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.