தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை ஆகம விதிகள் மாறாமல் புனரமைக்க 5 நிபுணர்களை கொண்ட குழுவை சென்னை ஐகோர்ட்டு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புராதன சின்னங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் உள்பட 13 பழமையான கோவில்களை பராமரிக்க தமிழக அரசு தகுதியான நிபுணர்கள் குழுவை அமைக்கவில்லை என்று பத்திரிகையில் செய்தி வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறது. தமிழக அரசுக்கு பல உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கை கடந்த வாரம் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, பழமையான கோவில்களையும், புராதன சின்னங்களையும் சீரமைக்க தகுதிவாய்ந்த நிபுணர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டும், இதுவரை நிபுணர்கள் குழுவை இந்து சமய அறநிலையத்துறை அமைக்கவில்லை. எனவே, இந்த குழுவை 7-ந் தேதிக்குள் அமைக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிபுணர்களின் பெயர் களை கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அறநிலையத்துறை பரிந்துரை செய்ததன் அடிப்படையில், தொல்லியல் துறை நிபுணர்களான முத்தையா ஸ்தபதி, சி.இ.சத்தியமூர்த்தி, ஐ.ஐ.டி. கட்டிடக்கலை பேராசிரியர் அருண்மேனன், ஆகம நிபுணர்களான சகாயன பட்டாச்சார்யா (வைணவம்), அருணா சுந்தரம் (சைவம்) ஆகிய 5 பேரைக் கொண்ட குழுவை அமைக்கின்றோம். இந்த குழுவை சேர்ந்த நிபுணர்கள், பழமை மாறாமல் கோவில்கள், புராதன சின்னங்கள் ஆகியவற்றை ஆகம விதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரமைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.