அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று 2-வது நாளாக அக்கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் வேலாயுதம் பாளையத்தில் பிரசாரம் செய்தார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று 2-வது நாளாக அக்கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் வேலாயுதம் பாளையத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரவக்குறிச்சியில் நடப்பது இடைத்தேர்தல் இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைத்ததால் நடைபெறும் மறுதேர்தல் ஆகும். தொழில் துறையில் 3-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 18-வது இடத்துக்கு போய் விட்டது. விவசாயத்தில் 17- வது இடத்துக்கு சென்று விட்டது.
இதற்கு ஆண்ட மற்றும் ஆளுங்கட்சியின் திறமையின்மையே காரணம். மாநிலம் உதயமான 2 ஆண்டுகளில் தெலுங்கானா தொழில் துறையில் முதலிடத்துக்கு வந்துள்ளது. ஆந்திராவில் சந்திரபாபுநாயுடு நதிகளை இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் தமிழகத்தில் நதிகளை இணைக்க வேண்டாம். இங்குள்ள ஆறு, குளங்களையாவது தூர் வாருங்கள். அவ்வாறு செய்தாலே மற்ற மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்தும் நிலை வராது. உங்களுக்கு சொந்தமான கனிம வளங்களை கொள்ளையடிக்கும் போது கோபம் வரவில்லையா?
மக்கள் நலக்கூட்டணியால் மாற்றம் வரவில்லை அதனால் வெளியேறிவிட்டோம். இந்த தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், தொகுதியை மாற்றி காட்டுகிறோம். அரவக்குறிச்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சராக இருந்தவர். தி.மு.க. வேட்பாளர் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை வகித்தவர். இருவரும் அரவக்குறிச்சி தொகுதியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பிரமேலதா பேட்டி அளிக்கும்போது, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் தே.மு.தி.க. ஆதரவு கேட்டால் பரிசீலிப்போம் என்கிறார்கள்.என்னை பொறுத்தவரை அவர்களாகவே முன்வந்து தே.மு.தி.க.வுக்கு ஆதரவளிக்க வேண்டும். வைகோவின் கருத்துகள் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்றார்.