ஜெயலலிதா ஓரிரு நாளில் சாதாரண வார்டுக்கு மாற்றம்

324 0

201611080743236937_jayalalithaa-will-be-shifted-to-normal-ward-in-few-days_secvpfஉடல்நலம் தேறிய நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓரிரு நாளில் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட இருக்கிறார். தற்போது அவருக்கு எழுந்து நடக்க பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு காய்ச்சல் உடனடியாக குணப்படுத்தப்பட்டாலும், நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்ய ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டியிருந்தது. ஜெயலலிதாவுக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான அப்பல்லோ ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் ஆகியோர் இணைந்து சிகிச்சை மேற்கொண்டனர். கூடுதலாக அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் திரும்பி சென்றுவிட்டனர். அடிக்கடி தொலைபேசி மூலம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து, சிகிச்சை முறைகள் குறித்து தெரிவித்து வருகின்றனர். நேற்று 47-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பிசியோதெரபி நிபுணர்கள் சீமா, ஜூடி ஆகியோர் எழுந்து உட்காரவும், நடக்கவும் பயிற்சி அளித்தனர். நேற்று ஜெயலலிதா 3 மணி நேரத்திற்கும் மேல் செயற்கை சுவாசம் இல்லாமல் இயல்பாக மூச்சு விட்டார். படுக்கையில் இருந்து எழுந்து நிற்பதற்கு பழகினார்.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்னும் ஓரிரு நாட்களில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட இருக்கிறார். அவருக்கு தற்போது போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் இருந்து உணவு தயாரித்து எடுத்துவரப்பட்டு வழங்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக, நேற்று நடிகர் பிரபு, அவரது மனைவி புனிதவதி, அவர்களது மகன் விக்ரம் பிரபு, அவரது மனைவி உஜ்ஜைனி, நடிகர் கிட்டு ஆகியோர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர்.

உள்ளே சென்ற அவர்கள், அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் டாக்டர்களிடம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு வெளியே வந்தனர்.

அப்போது, நடிகர் பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:-


முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி விசாரிக்க நடிகர் பிரபு, அவரது மகன் நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் வந்த போது எடுத்தபடம்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகவும் நலமாக இருக்கிறார். இன்னும் 2 அல்லது 3 தினங்களில் சிறப்பு வார்டில் இருந்து தனி வார்டுக்கு அவர் வந்துவிடுவார். ஜெயலலிதா விரைவான குணமடைய தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் மக்களின் பிரார்த்தனை தான் காரணம். அதனால், பூரண குணமடைந்து விரைவில் வீட்டிற்கு திரும்பி விடுவார், கோட்டைக்கும் வருவார் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நாங்கள் எங்கள் குடும்பத்தில் இருந்து இவ்வளவு நாட்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்நலம் விசாரிக்கவில்லை என்றாலும், அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்துக் கொண்டுதான் இருந்தோம். ஜெயலலிதா மிகவும் நன்றாக குணமாகிவிட்டார். ஆகையால், மக்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம்.

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையை டாக்டர்கள் தந்திருக்கின்றனர். ஜெயலலிதா மீது என்னுடைய தந்தை (சிவாஜி கணேசன்) ரொம்ப பிரியமாக இருப்பார். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று ஆண்டவனையும், அப்பாவையும் வேண்டுகிறோம்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து பேசினேன். இன்னும் 2 நாட்களில் அனைவரும் பார்க்கும் வகையில் ஜெயலலிதா இருப்பார். கலை உலகம் நன்றாக இருக்கவும், தமிழக மக்கள் நலமாக இருக்கவும் ஜெயலலிதா சீக்கிரம் வர வேண்டும். அவருடைய உடல்நிலை குறித்து டாக்டர்கள், கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. அந்த அளவுக்கு ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். மிகவும் நன்றாக குணமடைந்து விரைவில் வருவார்.இவ்வாறு நடிகர் பிரபு கூறினார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கரன் அமைச்சர்களிடம் முதல் -அமைச்சரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.