இலங்கை பெண் சவூதி அரேபியாவில் உயிரிழப்பு (காணொளி)

374 0

maskeliya-family-voiceஹட்டன் – மஸ்கெலியா – சூரியகந்த பகுதியைச் சேர்ந்த பெண் சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன் – மஸ்கெலியா – சூரியகந்த பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவரது சகோதரன் இன்று தெரிவித்துள்ளார்.
றியாத் நகரிலுள்ள முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே குறித்த பெண் உயிரிழந்திருந்ததாக அந்த முகாமிலுள்ள சில தரப்பினர் சமூக வலைத்தளங்களின் ஊடாக குரல் பதிவுகளை அனுப்பி வைத்திருந்தனர்.

குறித்த பெண்ணுக்கு விஷ ஊசியொன்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுயநினைவின்றி இருந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த பின்னணியில் சில தினங்களுக்கு பின்னர் அவருக்கு சுயநினைவு வந்துள்ள நிலையில், அவர் சிறிது நேரம் சக இலங்கை பெண்களும் கலந்துரையாடியுள்ளார்.
இவ்வாறு கலந்துரையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக அந்த முகாமிலுள்ள ஏனைய பெண்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் அதே முகாமிலுள்ள குளிரூட்டப்பட்ட அறையொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
இந்த பெண் உயிரிழந்து 8 நாட்கள் கடந்துள்ள போதிலும், அவரது உயிரிழப்பு தொடர்பில் இதுவரை எவரும் தமக்கு அறிவிக்கவில்லை என அவரது சகோதரனான பழனியாண்டி பரமசிவம் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் குடும்பத்தார் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், மஸ்கெலிய பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்த தனது சகோதரியின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர அரசாங்கம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த பெண்ணை சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணான அனுப்பி வைத்த முகவர் நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனது சகோதரி வெளிநாடு சென்றதன் பின்னர் இரண்டு தடவைகள் மாத்திரமே சம்பள பணத்தை தமக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் சவூதியில் துன்புறப்படுத்தப்பட்டு வருவதாக பழனியாண்டி கற்பகவள்ளி தமக்கு தொலைபேசியூடாக தெரிவித்திருந்தாக அவரது சகோதரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து பணிப் பெண்களாக சென்ற சுமார் 80ற்கும் அதிகமானோர் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த முகாமிலுள்ள இலங்கையர்கள் சுட்டிக்காட்டியிருந்தமையை நாம் கடந்த மூன்றாம் திகதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.