முரசொலி நிலம்; ஸ்டாலின் அரசியலில் நீடிப்பது நாட்டுக்கே ஆபத்து; அரசியலில் இருந்து விலகுக: ஜி.கே.மணி

336 0

முரசொலி நிலம் பஞ்சமி அல்ல என்பதை நிரூபிக்க தவறி விட்டதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் இருந்து விலக வேண்டும் என, பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.மணி இன்று (ஜன.31) வெளியிட்ட அறிக்கையில், “முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிக்கப் போவதாக சவால் விடுத்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், முரசொலி அறக்கட்டளையும் இப்போது அந்த நிலமே தங்களுடையது அல்ல; அந்த நிலத்தில் முரசொலி அலுவலகம் வாடகைக்கு தான் இயங்குகிறது என்று தட்டிக்கழித்து விட்டு தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போது புதிய பூசாரி ஒருவரை நியமித்து ஒன்றுக்கும் உதவாத வாதங்களை விளக்கங்களாக வழங்கச் செய்துள்ளார்.

ஏற்கெனவே இருந்த பூசாரி இந்த விவகாரத்தில் திமுகவுக்கும், முரசொலி அறக்கட்டளைக்கும் ஏகப்பட்ட சேதங்களை செய்து விட்டதாலோ என்னவோ, புதிய பூசாரியை அமர்த்தியிருக்கின்றனர். பழைய பூசாரி தம்மை முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் என்று கூறிக்கொண்டு விளக்கம் அளித்துவந்தார். இப்போது புதிய பூசாரி எந்த அடிப்படையில் முரசொலி சர்ச்சை குறித்து விளக்கமளிக்கிறார் எனத் தெரியவில்லை.

புதிய பூசாரியான டி.கே.எஸ்.இளங்கோவன் எந்த அடிப்படையில் வேண்டுமானாலும் இந்த விஷயத்தில் நுழையட்டும். அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால், முரசொலி தொடர்பாக ராமதாஸ் எழுப்பிய எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. மாறாக, சித்தம் கலங்கிய ‘சேது’ பட நாயகனைப் போல மன்னிப்பு, மன்னிப்பு என்று புலம்பியிருக்கிறார். “எழுப்பப்பட்ட பிரச்சினை முரசொலி இருக்கும் இடம், பஞ்சமி நிலமா அல்லவா என்பது தானே தவிர, முரசொலி அலுவலகம் அங்கு வாடகைக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல” என்று டி.கே.எஸ். இளங்கோவன் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

ராமதாஸும் அதையே தான் கூறுகிறார்; நாங்களும் அதையே தான் கூறுகிறோம். முரசொலி இருக்கும் இடம், பஞ்சமி நிலமா அல்லவா என்பது தான் பிரச்சினை. முரசொலி இருக்குமிடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபியுங்கள், அதற்கான மூலப்பத்திரத்தை வெளியிடுங்கள் என்று தான் கேட்கிறோம்.

ஆனால், அதற்கு முரசொலி மற்றும் திமுக தரப்பிலிருந்து இன்று வரை பதில் இல்லை. ஆனால், இப்போது திடீரென “மாப்பிள்ளை அவரு தான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்ற ‘படையப்பா’ வசனத்திற்கு ஏற்ப, “முரசொலி எங்களுடையது தான். ஆனால், அது அமைந்துள்ள இடம் யாருக்கோ சொந்தமானது” என சென்னை உயர் நீதிமன்றத்திலும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் கூறி, முரசொலி நிலம் யாருடையது என்பதை நிரூபிக்க வேண்டியது தங்கள் கடமை அல்ல என்று பின்வாங்கி ஓடுவது திமுகவும், முரசொலியும் தானே? ‘சின்ன அண்ணா’ என்றும், ‘தத்துவ மேதை’ என்றும் போற்றப்பட்ட டி.கே.சீனிவாசனின் புதல்வரால் இதைக் கூட புரிந்துகொள்ள முடியவில்லையா?

முரசொலி சர்ச்சை என்பது நிலம் சார்ந்தது மட்டுமல்ல. அதையும் தாண்டி அரசியல் நேர்மை மற்றும் தூய்மை சார்ந்தது ஆகும். அரசியல் தூய்மை என்பது உள்ளதை உள்ளபடியே ஒப்புக்கொள்வது ஆகும்; அரசியல் நேர்மை என்பது தவறு செய்து விட்டால் அதை ஒப்புக்கொண்டு செய்த தவற்றுக்காக மன்னிப்பு கேட்பது ஆகும். இந்தத் தகுதிகள் திமுக தலைமைக்கு இருக்கிறதா? என்பதற்கான சோதனைக்களம் தான் முரசொலி நில சர்ச்சை ஆகும். அந்தக் களத்தில் திமுக தலைமை அடுத்தடுத்து படுதோல்வி அடைகிறது.

முரசொலி பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டை ராமதாஸ் முன்வைத்த போதே அதுகுறித்த உண்மையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறது என்றால் அப்போதே அதை தெரிவித்து இருக்கலாம். மாறாக வீராவேசமாக முரசொலி நிலத்திற்கான பட்டாவை வெளியிட்டார் ஸ்டாலின். வாடகைக்கு இருக்கும் ஒருவர் எப்படி இன்னொருவர் நிலத்திற்கான பட்டாவை வெளியிட முடியும்?

முரசொலி நிலத்திற்கான பட்டாவை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் மூலப் பத்திரத்தை வெளியிடுவாரா? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பி 100 நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை மூலப் பத்திரத்தை ஸ்டாலின் வெளியிடவில்லை. முரசொலி நிலம் மீதான பழியை உரிய அதிகாரம் படைத்த அமைப்பிடம், உரிய காலத்தில் நிரூபித்து துடைப்பேன் என்று கூறினார். ஆனால், இப்போது அந்த நிலமே தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியிருக்கிறாரே. இது தான் அரசியல் நேர்மையா?

“எழுப்பப்பட்ட பிரச்சினை முரசொலி இருக்கும் இடம், பஞ்சமி நிலமா அல்லவா என்பது தானே தவிர, முரசொலி அலுவலகம் அங்கு வாடகைக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல” என்று கூறுவதன் மூலம் அரசியல் நேர்மை குறித்த இந்த கேள்வியை கடந்து சென்று விட முடியுமா?

அதுமட்டுமல்ல. முரசொலி நிலம் குறித்த உண்மைகளை திமுகவும், முரசொலி நிர்வாகமும் திட்டமிட்டு மறைத்து வருகின்றன என்பது தான் உண்மை. சென்னை உயர் நீதிமன்றத்திலும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் முரசொலி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட உறுதிமொழிப் பத்திரங்களில், முரசொலி வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதை 19.11.2019 அன்று சென்னை சாஸ்திரி பவனில் நடந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணையில் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், சாஸ்திரிபவனில் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி, “முரசொலி நிலம் தொடர்பாக எங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளன. முரசொலி விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் தலையிட உரிமையில்லை. எங்களைப் பொறுத்தவரை இந்த வழக்கு இன்றுடன் முடிந்து விட்டது” என்று கூறினார். உள்ளுக்குள் நடந்த விசாரணையில் அது வாடகை நிலம் என்று கூறிவிட்டு, வெளியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதை மறைத்துப் பேசுவது பித்தலாட்டமா? இல்லையா? இது தான் திமுகவின் அரசியல் நேர்மையா?

முரசொலி விவகாரத்தில் கடந்த 3 மாதங்களில் இத்தனை முறை நிலைப்பாட்டை மாற்றிய திமுகவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் என்ன அரசியல் நேர்மை இருக்க முடியும்? முரசொலி நிலம் தொடர்பாக வெளியில் ஒரு நிலைப்பாடு, உள்ளுக்குள் ஒரு நிலைப்பாட்டை திமுக கடைபிடித்து வருவது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

இத்தகையவர்கள் அரசியலில் நீடிப்பது நாட்டுக்கே ஆபத்து என்பதாலும், முரசொலி நிலம் பஞ்சமி அல்ல என்பதை நிரூபிக்க தவறி விட்டதாலும், அவரே விடுத்த சவாலின்படி அரசியலில் இருந்து விலக வேண்டும். அதற்கான தேதியை புதிய பூசாரி டி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டுச் சொல்ல வேண்டும்” என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.