இத்தாலிக்கு 6 ஆயிரக்கும் அதிகமான பயணிகளுடன் சொகுசுக்கப்பலில் வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக எழுந்த பீதியையடுத்து அந்த கப்பல் துறைமுகத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டது.
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரசுக்கு அந்நாட்டில் மட்டும் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 ஆயிரத்து 692 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 15 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஸ்பெயின் நாட்டின் பல்மா டி மலோர்கா நகரில் இருந்து மேற்கு மிடிடேரியன் பகுதிக்கு ஒரு சொகுசுக்கப்பல் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சொகுசுக்கப்பலில் சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,651 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், அந்த சொகுசுக்கப்பல் நேற்று இத்தாலி நாட்டின் சிவிடவிச்சியா நகரில் உள்ள துறைமுகத்திற்கு வந்தடைந்தது. அந்த நகரில் பல பயணிகள் தங்கள் பயணத்தை முடித்துக்கொள்வதாக இருந்தது.
ஆனால், சொகுசுக்கப்பலில் பயணம் செய்த 2 சீன பயணிகளுக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்ததும் அவர்கள் தங்கள் முகங்களில் முகமூடி அணிந்திருந்ததும் பயணிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கப்பலில் இருந்த மருத்துவர்கள் அந்த சீன பயணிகளை தனிமைபடுத்தி அவர்களிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு உள்படுத்தியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என அச்சம் எழுந்ததையடுத்து அந்த கப்பலில் உள்ள பயணிகள் இத்தாலி நாட்டிற்குள் இறங்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
இத்தாலி நாட்டிற்குள் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத நிலையில் சொகுசுக்கப்பல் பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.