வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி!

388 0

புதிய ஊதிய ஒப்பந்தம் போட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், வங்கி சேவைகள் பாதிப்படைந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.

வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசிப்படி புதிய ஊதிய ஒப்பந்தத்தை போட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவேண்டும். வாரத்துக்கு 5 நாட்கள் பணி நிர்ணயிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வந்தன.

இதனைதொடர்ந்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உள்பட 9 சங்கங்களை உள்ளடக்கிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

இதையடுத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளோடு கடந்த 27-ந்தேதி டெல்லியில் மத்திய தலைமை தொழிலாளர் நல கமிஷனரும், நேற்று முன்தினம் மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்தை சேர்ந்த அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தை முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதனால் ஏற்கனவே அறிவித்தப்படி 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. வங்கி ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் சென்னையில் சில தனியார் வங்கிகளை தவிர்த்து, பெரும்பாலான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. வங்கிகளின் நுழைவு வாயிலில் வங்கிகள் மூடப்பட்டுள்ளதாக பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் அறியாமல் பணம் எடுப்பதற்காக, பணம் செலுத்துவதற்காக, வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவுகள் போடுவதற்காக என்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக வங்கிகளின் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வங்கி பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாததால், சேவைகளை பெறமுடியாமல் வாடிக்கையாளர்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.

காசோலைகள் அடுத்தகட்ட நிலையை எட்டமுடியாமல் தேக்கம் அடைந்தது. அதே சமயத்தில் ஏ.டி.எம். மையங்களில் உள்ள பணம் செலுத்தும் எந்திரம் மூலம் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியும், பணம் எடுக்கும் எந்திரத்தில் தேவைக்கு ஏற்ப பணத்தையும் எடுத்து சிலர் சமாளித்துக் கொண்டனர்.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அவர்கள், ‘ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே இறுதி செய்ய வேண்டும்’, ‘குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தவேண்டும்’, ‘புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் சி.எச்.வெங்கடாச்சலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தோம். இதையடுத்து டெல்லி, மும்பையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசும், வங்கி நிர்வாகமும் தான் பொறுப்பு.

நாடு முழுவதும் ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான 31 லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் 16 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளது. எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏற்கனவே அறிவித்ததுபோன்று மார்ச் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை வேலை நிறுத்தம் திட்டமிட்டப்படி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கி ஊழியர்கள் இன்றும் (சனிக்கிழமை) 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஏ.டி.எம். எந்திரத்திலும் பணம் நிரப்பும் பணி பாதிக்க வாய்ப்பு உள்ளது.