வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்கும் உள்நோக்கத்தில் இந்த சோதனையை நடத்தி உள்ளனர் என்று திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தனது வீட்டில் நடைபெற்ற சோதனை தொடர்பாக செந்தில் பாலாஜி கூறியதாவது:-
என் மீது சென்னை குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்த மோசடி வழக்கில் எனக்கோ, எனது தம்பிக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று 2017 ஆம் ஆண்டில் கோர்ட்டிலேயே தீர்ப்பாகி உத்தரவு பெற்றுள்ளோம்.
முடிந்து போன வழக்கை மீண்டும் தோண்டுகிறார்கள். இதற்காக ஏதாவது ஆவணங்கள் சிக்குமா என்று தேடி வருகிறார்கள். சென்னையில் எனது வீடு பூட்டி கிடக்கிறது. கரூரில் உள்ள எனது ஜவுளி ஏற்றுமதி நிறுவனமும் பூட்டி கிடக்கிறது.
கரூரில் உள்ள வீட்டிற்கு இன்று காலை வந்த போலீசார் நான் இல்லாத நிலையில் எனது தாய், தந்தையை டார்ச்சர் செய்துள்ளனர். வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர். இது முழுக்க முழுக்க அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை.
வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்கும் உள்நோக்கத்தில் இந்த சோதனையை நடத்தி உள்ளனர். இதற்காகவே அரசும், அரசு எந்திரமும் முழு வேகத்துடன் செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.