ஷானி அபேசேகர, நிஷாந்த சில்வாவின் வாக்குமூலங்களை பதிவுசெய்ய சி.ஐ.டி.க்கு உத்தரவு!

323 0

ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தும் வண்ணம் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி செயற்பட்டமை தொடர்பில், குறித்த பிரதான வழக்கின் பிணையில் உள்ள 8, 9 ஆம் பிரதிவாதிகளான அனுர துஷார மெண்டிஸ் மற்றும் கஸ்தூரிகே காமினி ஆகியோரையும் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்னவையும் இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இது குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த விடயத்தில், குறித்த பிரதான சம்பவமான கடத்தல் காணாமல் அக்கப்பட்டமை தொடர்பில் சாட்சியாளர்களான லெப்டினன் கொமாண்டர் வெலகெதர, சி.ஐ.டி.யின் முன்னாள் அதிகாரிகளான ஷானி அபேசேகர மற்றும் நிஷாந்த சில்வாவின் பெயர்களை சந்தேக நபர்கள் கூறியுள்ளதால் அவர்களின் வாக்கு மூலங்களையும் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டது.

இந் நிலையிலேயே இவ் வழக்கை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.