கடந்த டிசம்பரில் ஏற்பட்ட ஒரு நிலை மீண்டும் சென்னைக்கு வந்து விடக்கூடாது என்றும், மழை வெள்ள தடுப்பு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் தமிழக அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கேள்வி:- தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளதா?
பதில்:- முதல்-அமைச்சர் கோட்டையில் இருந்தாலோ அல்லது போயஸ் தோட்டத்தில் இருந்தாலோ அங்கு சென்று நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது. காரணம் அவர்தான் சட்டம்-ஒழுங்கை கையில் வைத்துள்ளார். அவர்தான் உள்துறை அமைச்சராகவும், காவல்துறையின் அமைச்சராகவும் உள்ளார். நான் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கும் பல கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகிறோம். கருணாநிதி இன்றைக்கும் கூட தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பற்றி மிகவும் தெளிவாக கூறி இருக்கிறார். எனவே இந்த ரவுடிகளின் சாம்ராஜ்யத்தையும், நடந்து வரும் படுகொலைகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கடமை.
கேள்வி:- சென்னையில் மழை வெள்ளம் பாதிப்புகள் மீண்டும் வராமல் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகி வருவது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- நான் இதுபற்றி சட்டமன்றத்தில் கூட பேசியுள்ளேன். கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்டது போன்ற ஒரு நிலை மீண்டும் சென்னைக்கு வந்து விடக்கூடாது என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டு உள்ளேன். அதற்கென ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது, அந்த நிதியில் இதுவரை என்னென்ன பணிகள் செய்து இருக்கிறார்கள் என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் கேட்டு இருக்கிறேன். இதுவரை ஒரு பதிலும் வரவில்லை.
கேள்வி:- புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை என காவல்துறை மீது பரவலாக குற்றச்சாட்டு உள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- காவல்துறையில் நிறைய காலிபணியிடங்கள் இருக்கிறது. காவல்துறையில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான யோக்கியதை கூட இந்த அரசுக்கு இல்லை என்பது தான் இன்றைக்கு உள்ள சூழ்நிலை. தேர்தலுக்கு முன்பு இதனை நீதிமன்றம் கண்டித்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இந்த அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தான் வேதனைக்குரிய ஒன்று. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.