யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்கரை பிரதேசத்தில் இன்று அதிகாலை 118 கிலோ கேரள கஞ்சா தர்மபுரம் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுண்டிக்குளம் கடற்கரையில் படகொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இறக்கப்படுவதனை அவதானித்த கடற்றொழிலாளர்கள் குறித்த இடத்திற்கு விரைந்து சென்றபோது பொதிகளை இறக்கிய படகு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.
இதேவேளை பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக கடற்கரையில் காத்திருந்த நபர்களும் தலைமறைவாகிய நிலையில் கடற்றொழிலாளர்களினால் ஆரம்பத்திலேயே தர்மபுரம் பொலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
உடனடியாக அதிகாலை ஜந்து முப்பது மணிக்கு தர்மபுரம் பொலீஸ் பொறுப்பதிகாரி டிஎம் சத்துரங்க தலைமையிலான ஒரு பொலீஸ் குழு சுண்டிக்குளம் கடற்கரைக்கு விரைந்து சென்ற போது அங்கு கஞ்சா பொதிகள் மாத்திரமே கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது. சந்தேக நபா?கள் எவரும் அங்கிருக்கவில்லை.
குறித்த கஞ்சா பொதிகளை கைப்பற்றிய பொலீஸார் அது சுமார் 72 கிலோ கிராம் இருக்கும் என ஆரம்பத்தில் தெரிவித்தனர்.
பின்னர் அவை தர்மபுரம் பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அளவை செய்யப்பட்டபோது கடற்கரையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 94 கிலோ கிராமாக காணப்பட்டது.
பொலீஸார் கஞ்சா பொதிகளை மீட்டு திரும்பிய பின்னர் எற்கனவே அவற்றிலிருந்து கொண்டு செல்வதற்கு எடுத்திருந்த 24 கிலோ கஞ்சா பொதிகளுடன் தலைமறைவாக இருந்து இரண்டு சந்தேக நபர்களும் உந்துருளியில் செல்வதனை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.
எனவே அவர்களை சுற்றி வளைத்த பிடிக்க முற்பட்போது அவர்களும் தாங்கள் கொண்டு சென்ற கஞ்சா பொதிகளை எறிந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனை கைப்பற்றிய கடற்படையினர் அதனை கிளிநொச்சி விசேட அதிரப்படையினரிடம் கையளித்துள்ளனர்.
அதிரடிப்படையினர் அதனை தர்மபுரம் பொலீஸாரிடம் கையளித்துள்ளனர்.
எனவே தற்போது ஒட்டுமொத்தமாக 118 கிலோ கேரள கஞ்சா கைற்றப்பட்டுள்ளது.
இயந்திர படகுகள் மூலம் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு எடுத்துச் செல்லப்படவிருந்த நிலையில் கடற்றொழிலாளர்கள் அவதானித்து பொலீஸாருக்கு தகவல் வழிங்கியதனையடுத்து கடத்தல்காரர்கள் கஞ்சாவை அந்த இடத்திலேயே விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிப்படுகிறது.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் மகேஷ் வெலிகண்ணவின் வழிநடத்தலில் தர்மபுரம் பொலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.