புகையிலை ஒழிப்பை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகையிலை தொழிற்துறையின் முயற்சிகளை எதிர்ப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதுடில்லி நகரில் இன்று நடைபெற்ற புகையிலை கட்டுப்பாடு கட்டமைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை வகுப்பாளர்களிடம் ஆதிக்கம் செலுத்துதல் மற்றும் வழக்கு தொடரல் போன்றவற்றின் ஊடாக புகையிலை ஒழிப்பு நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக புகையிலை தொழிற்துறை மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புகையிலை தொழிற்துறையினர் அரசாங்கத்தின் சட்டங்களை சவாலுக்கு உட்படுத்தி வருவதுடன், ஊடகங்களையும் அவர்கள் வற்புறுத்தி வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
புகையிலை தொழிற்துறையினருக்கு எந்தவகையிலும் தயவுதாட்சனை காட்ட கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மதுபான ஒழிப்பு மற்றும் புகையிலை கட்டுப்பாடு ஆகிய நடவடிக்கைகளுக்காக முன்னுரிமை வழங்கி வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வளி மாசடைதல் சட்டங்கள், பொது இடங்கள் மற்றும் மூடிய வெளிகளில் புகைத்தல் தடை செய்யப்படுவதன் மூலம் புகையிலை பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.