போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசத்தின் தலையீடு இல்லாவிட்டால் தமிழருக்கு நீதி கிடைக்காது!

303 0

download-55-1போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தலையீடு இல்லாவிட்டால் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மற்றும் பொது நலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனேலா இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இன்றைய சந்திப்புத் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர்,

வடக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதால் எந்தவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனிலேவிற்கு தெளிவுபடுத்தியதாக குறிப்பிட்டார்.

இதுகுறித்து வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், சமாதானம், நல்லுறவு குறித்து என்ன நடைபெறுக்கின்றது என்றும் ஜெனீவாவில் அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. செயலாளருடைய அறிக்கை சம்பந்தமாகவும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவதற்காக வந்தார்.

ஜெனீவா தீர்மானம் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் போதே பல கடிதங்களை ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கடந்த வருடம் ஒக்டோபர், செப்டெம்பர் மாதங்களில் எழுதியிருந்தேன். அவற்றில் பல நடைமுறையில் நடந்தவற்றை எடுத்துக்காட்டினேன்.

சர்வதேச ஈடுபாட்டுடன் யுத்த விசாரணை நடைபெறாது விட்டால் நீதியைப் பெறமுடியாது விடும் என்று குறிப்பிட்டேன். இப்பொழுதுகூட சட்டத்தரணிகள், நீதிபதிகள் எந்தவிதத்திலும் வெளிநாட்டு உள்ளீடுகளை அரசாங்கம் கொண்டு வருவதாக இல்லை.

வெளிநாட்டு உள்ளீடுகள் வராது இருந்தால் எங்களுக்கு நீதி கிடைக்காது என்பது நிச்சயம். போர்க்குற்ற சட்டமானது எங்களுடைய சட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். இதுசம்பந்தமாக அரசாங்கத்தினால் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். என்னவாக இருந்தாலும் சமாதானத்தை நோக்கிச் செல்லும் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறினார்.

நாங்கள் விட்டுக்கொடுப்பதற்கு முன்வந்தால்கூட பல விதங்களில் எங்களை அடிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தெற்கில் இருந்து எடுக்கப்படுவதாகவும் எங்களுடைய தனித்துவத்தையும் உரிமைகளையும் புறக்கணிப்பதாக இருப்பதை நாங்கள் எடுத்துக்காட்டினேன். அரசாங்கத்துடன் பல விடயங்களை பேசுவதாகக் கூறிச் சென்றார்.

மற்றும் விதவைகளின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் அவர்கள் சம்பந்தமான செயற்திட்டங்கள் செய்ய வேண்டிய தேவை இருப்பதையும் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.