சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானது!

353 0

brad-adams-e1464327965781பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக சிறீலங்காவில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்தினால் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் மேலும் மோசமடையும் என அமெரிக்காவின் நியுயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், சிறீலங்காவில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் காவல்துறை உட்பட படைத்தரப்பினர் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டம் அவர்களுக்கு மேலும் அதிகாரமளிப்பதாக அமையும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. டிசெம்பர் ஏழாம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் சிறீலங்காவில் தொடரும் சித்திரவதைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், சிறீலங்கா அரசாங்கம் படை கட்டமைப்புக்களில் உண்மையான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது என்றால், முதலில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராசா கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்க காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் இதற்கு சிறந்த உதாரணம் என்றும் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பொது மக்கள் காவல்துறையினரின் கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்ததால் அந்த சம்பவத்தை மூடிமறைக்க சிறீலங்கா காவல்துறையினரால் முடியாது போய் விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நவம்பர் 15 ஆம் திகதி ஐ.நாவின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசாங்கம், படைத் தரப்பால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை தடுப்பதற்கு மேற்கொள்ளவுள்ளத் திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் காவல்துறையில் இடம்பெறும் மோசமான சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் விடயத்தில் சிறீலங்கா அரச தரப்பினரால் உறுதியான வாக்குறுதியை வழங்க முடியாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவிக்கின்றார்.

சிறீலங்கா காவல்துறைக்கு சட்டவிரோதக் கைதுகள், சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோதப் படுகொலைகள் ஆகிய சம்பவங்கள் வழமையான நிகழ்வுகளாகியுள்ளமை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பிரட் அடம்ஸ், அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய காவல்துறையினரை சட்டத்தின் முன் நிறுத்த சிறீலங்கா அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு யூன் மாதம் கொழும்பு கண்டி வீதியில் வைத்து இந்திய ஜயசிங்க என்ற இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், 2014 ஆம் ஆண்டு மே மாதம் சந்துன் மாலிங்க என்ற இளைஞன் படுகொலை சம்பவம், 2015 மார்ச் மாதம் தெல்கொட பகுதியில் வைத்து பொலிசாரால்கைதுசெய்யப்பட்ட இளைஞர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றமை ஆகிய சம்பவங்களும் சிறீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால சட்டவிரோத நடவடிக்கைகள் என பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவிற்கு சிறீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ள அறிக்கையொன்றில், சிறீலங்காவில் இன்னமும் காவல்துறையினரினால் நடத்தப்படும் இரகசிய சித்திரவதை முகாம்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்த சிறீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை தொடர்புபட்ட ஒருசில சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், பெரும்பாலானவை கண்டுகொள்ளப்படுவதில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சிறீலங்கா அராங்கம் உண்மையில் பாதுகாப்புக் கட்டமைப்பில் மறுசீரமைப்பை மேற்கொள்வதாயின், காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோதப் படுகொலைகளைத் தடுப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதனை யாழ் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராசா கஜன் ஆகியோரின் படுகொலைகளிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ள பிரட் அடம்ஸ், காவல்துறையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக புதிய சட்டமூலத்தை சிறீலங்கா அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.