காலாவதியாகியுள்ள 23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி காலம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, கல்முனை உள்ளிட்ட 17 மாநகர சபைகளினதும், ஒரு நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகளினதும் ஆட்சி காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
இவற்றுக்கான ஆட்சி காலத்தை மேலும் நான்கு மாதங்களுக்கு நீடிக்ககூடிய சட்ட வாய்ப்பு இருக்கிறது.
எனினும் அவ்வாறு கால நீடிப்பு செய்யப்பட மாட்டாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாக பணிகள், குறிப்பிட்ட செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள 336 உள்ளுராட்சி மன்றங்களில், 313 உள்ளுராட்சி மன்றங்கள் ஏற்கனவே விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.