கொழும்பிலும் இலங்கையின் பெரிய நகரங்களிலும் பணியாளர்களாக இணைக்கப்படுகின்ற பெருந்தோட்டப்புறங்களை சேர்ந்த தமிழ் சிறுவர்களும் பெண்களும், உளரீதியான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆட்கடத்தல்கள் குறித்த அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி நேற்று வெளியிட்டிருந்தார்.
இதில், வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கையையும் அமரிக்கா தமது கண்காணிப்பு பட்டியலில் உட்படுத்தியுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பாரிய நகரங்களில் தொழில்புரிகின்ற பெருந்தோட்டத்துறை சார்ந்த தமிழ் சிறார்கள் மற்றும் பெண்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை.
அவர்களின் நடமாட்ட சுதந்திரம் என்பன மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் அவர்கள் உளரீதியாக பாதிப்படைகின்றனர்.
இதேவேளை மத்திய ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய இடங்களில் உள்ள சில பெண்கள், இலங்கையில் அண்மைய வருடங்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
காவற்துறையினர் கப்பம் பெற்றுக்கொண்டு பாலியல் தொழில்களை மேற்கொள்ள அனுமதிப்பதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மனித கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கை அரசாங்கம் ஆகக்குறைந்த செயற்பாட்டையே மேற்கொண்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்பபடுகின்றனர்.
அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் தொடர்ந்து நான்காவது வருடமாகவும், இலங்கை இந்த அறிக்கையில் டயர் 2 என்ற கண்காணிப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமரிக்கா தெரிவித்துள்ளது.