ஏழு முக்கிய விடயங்களுக்கு மாகாண சபைகள் முன்னுரிமை வழங்க வேண்டும் -கோட்டபாய

244 0

ஏழு முக்கிய விடயங்களுக்கு மாகாண சபைகள் முன்னுரிமை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சுற்று நிரூபனம் ஒன்றின் ஊடாக பணிப்புரை விடுத்துள்ளார்.

இது குறித்த விரிவான பணிப்புரைகள் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிற்கு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பாடசாலைகள், வைத்தியசாலைகள், வாராந்தர சந்தை, பொது பேருந்து நிலையங்கள், வீதி சுத்திகரிப்பு, தொற்று நோய்கள் மற்றும் கழிவு பொருள் முகாமைத்துவம் என்பன சிறந்த முறையில் தொழிற்படுவது குறித்து முன்னுரிமை முறையில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயங்களுக்கு ஜனவரி முதல் மார்ச் மாத காலப்பகுதியினுள் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த ஏழு விடயங்களின் மேம்பாடு குறித்த நடவடிக்கைகள் உடன் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், ஒவ்வொரு விடயங்களும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியின் பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.