வடக்கு மக்கள் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை- யாழ். கட்டளைத் தளபதி

427 0

dsc0114-300x195வடக்கில் வாழும் தமிழ் மக்கள் சமாதான விரும்பிகள் என்றும், அவர்களை கடந்த அரசாங்கம் பல்வேறு தடவைகளில் ஏமாற்றியிருப்பதாகவும் யாழ். கட்டளைத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வாரஇறுதி சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,

அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்ட விடயத்தில் பொலிசார் தங்கள் எல்லை மீறி செயற்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் சாதாரண சிவிலியன்களாக இருந்திருப்பின் சம்பவம் மறைக்கப்பட்டிருக்கும். பல்கலைக்கழக மாணவர்கள் என்பதால் தான் இந்தளவு எதிர்ப்புகள் உருவானது. எனினும் இதுபோன்ற சம்பவங்களில் வடக்கு மக்கள் மாத்திரமன்றி, தெற்கு மக்களும் எதிர்ப்பு காட்டவே செய்வார்கள்.

வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை மீளக் கையளித்தல், மீளக்குடியமர்த்துதல் ஆகிய விடயங்களில் முன்னைய அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்றும் வகையில் நடந்து கொண்டது. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கு மக்களைப் பொறுத்தவரை சமாதான விரும்பிகள். மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அத்துடன் உணர்ச்சிகரமான முறையில் அவர்களை உசுப்பிவிட முயலும் அரசியல்வாதிகள் பின்னால் ஒன்றுசேரவும் அவர்கள் தயாராக இல்லை.

அதே நேரம் இன்னொரு யுத்தம் வந்தாலும் அதனை எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் உள்ளது. அதற்கான பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.