ஜி ஜின்பிங் -சூச்சி சந்திப்பு: பல ஒப்பந்தங்கள் கையெழுத்து

224 0

உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக சீனா – மியான்மர் நாடுகளிடையே ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங், மியான்மருக்கு அரசியல் ரீதியாக இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில் சீனா – மியான்மர் இடையே மியான்மரின் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த ஒப்பந்தங்களில் பொருளாதாரம் மற்றும் ரயில் பாதை இணைப்புகள் ஆகியவையும் அடங்கும்.

ஆனால், சீன அதிபர் ஜி ஜின்பிங், மற்றும் மியான்மர் தலைவர் சூச்சியுடனான சந்திப்பில் புதிய ஒப்பந்தம் ஏதும் இல்லை. 19 வருடங்களுக்குப் பிறகு சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் விமர்சனத்துக்கு உள்ளானபோது அந்நாட்டுக்கு ஆதரவாக இருந்தது சீனா. இந்நிலையில் பிராந்தியத்தில் தனது வலிமையைச் சேர்க்கும் வகையில் தனது நட்புக் கூட்டணியில் மியான்மரையும் இணைக்கும் பணியில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது.