இளைஞர்கள் சீரழிவதற்கு பெற்றோர்களே பொறுப்பு!

329 0

12644872_1123871167623025_5912417491395399174_nஎமது சமூகத்தை பண்பட்ட ஒரு சமூகமாக மாற்றுவதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற முடியும் என்பது பற்றி ஆரய்ந்து நாம் யாவரும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை கிறிஸ்து நற்தூது பணியகம் ஏற்பாடு செய்த முத்தமிழ் விழா நிகழ்வு குடத்தனையில் அமைந்துள்ள கிறிஸ்து நற்தூது பணியக மண்டபத்தில் நேற்றைய தினம் இடம் பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று மாணவர்கள் வாசிப்புப் பழக்கங்களை முற்றாகத் துறந்து விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஒவ்வொரு வீட்டிலும் நூற்றுக்கணக்கான பெறுமதிமிக்க பயன்தரக்கூடிய புத்தகங்கள் நிரம்பியிருந்தன. மாணவ மாணவியர் தமது ஓய்வு நேரங்களில் கற்றல் அல்லது வாசிப்பு வேலைகளிலேயே கூடுதலாக ஈடுபட்டார்கள்.

இன்று நிலைமைகள் அவ்வாறு இல்லை. புத்தகங்கள் இருக்க வேண்டிய வீடுகளில் செல்போன்கள் அடுக்கப்படுகின்றன. கற்றலுக்கு செலவழிக்க வேண்டிய நேரத் துணுக்குகள் முகப்புத்தகங்களில் செலவீடு செய்யப்படுகின்றன. வயது வந்தவர்கள் கூட சம்பாஷிப்பதற்குக் கூச்சப்படுகின்ற பல விடயங்கள் இன்று இணைய வலைப்பின்னல்களில் வர்ணப்படங்களுடன் கூடிய செயன்முறை விளக்கங்களுடன் அமைந்திருப்பது சமூகத்தை வேண்டும் என்றே அடுத்துக்கெடுப்பதற்கான ஒரு முன்முயற்சியாகவே தென்படுகின்றது.

பாலியற் கல்வி என்பது பாடப் புத்தகங்களில் சேர்க்கப்படக்கூடிய ஒரு விடயமாக ஆராயப்படும் இவ் வேளையில் அவற்றை ஆபாசங்களாக மாற்றி மாணவர்களின் இச்சைகளைத் தூண்டுவதற்கும் அதன் வழி அவர்களை துர் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதற் கும் இந்த இலத்திரனியல் சாதனங்கள் காட்டுகின்ற கரிசனைகள் எம்மை மனவேதனை அடையச் செய்கின்றன.

இன்று வட பகுதியில் அரங்கேற்றப்படுகின்ற வாள்வெட்டு கலாசாரம், கொலை, களவு, பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவற்றிற்கு மூல காரணங்கள் இவ்வாறான நவீன சாதனங்களோ என்று எண்ண வேண்டியுள்ளது.

இந்தத் துர்ப்பழக்க வழக்கங்களை அரங்கேற்றுவது எமது இளைஞர் யுவதிகளே என எண்ணுகின்ற போது தவறு எங்கள் மீது அதாவது பெற்றோர்கள் மீதுதான் இருப்பதாகத் தெரிகின்றது. எமது கவனக்குறைவும் ஒரு முக்கிய காரணமாக அமையலாம்.

ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளின் ஒழுக்கங்கள், கற்றல் நட வடிக்கைகள், பழக்க வழக்கங்கள் கூர்ந்து அவதானிக்கப்படுகின்ற போது வீடு முன்னேறும்; இவ்வாறு வீடுகள் முன்னேற நாடு முன்னேறும். எனவே தேவையற்ற உள்ளீடுகள் நுழைய முடியாதவாறு கட்டுக்கோப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும்.

அவசர பணக்காரர்களாக மாற வேண்டும் என்பதற்காக கஞ்சா கடத்தல், கள்ளமண் ஏற்றிவிற்றல், அங்கீகாரமற்ற களவுத் தொழில்களை மேற்கொள்ளல் போன்றவற்றில் எமது இளைஞர்கள் ஈடுபடு கின்றார்கள்.

இவற்றைப் பெற்றாராகிய நாமே தடுக்க முற்பட வேண்டும். பிள்ளைகளுக்கு நாமே களவை கெட்ட பழக்க வழக்கங்களை வலிந்து பழக்குபவர்களாக அமையக் கூடாது என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.