2017 ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதியில் உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவில் ஒரு புதிய அதிபர் பதவியிலிருப்பார். அமெரிக்காவின் அதிபர் அந்நாட்டின் தலைவர் மட்டுமல்ல; சர்வதேச அளவில் மிகப் பெரிய ராணுவ நடவடிக்கைகளை முடிவு செய்யும் அமெரிக்க ராணுவத்தின் தலைமையும் அவர்தான். உலகப் பொருளாதாரமே டாலரை மையமாக வைத்து இயங்கி வரும் நிலையில், அமெரிக்கா அதன் தலைவரை தேர்ந்தெடுப்பது அமெரிக்காவுக்கு வெளியேயும் முக்கியத்துவம் பெற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் சர்வதேச அளவில் பிற நாடுகளின் போக்கை தீர்மானிக்க உள்ள அமெரிக்க அதிபரின் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியில் உள்ளனர்.
ஹிலாரி வெற்றிபெற்றால் சர்வதேச அளவிலான பொருளாதார உறவுகள் சீராக இருக்கும் என்கிற நம்பிக்கையிலிருந்து சர்வதேச நாடுகள் இந்த போக்கை கவனிக்கின்றன. ஒருவேளை ஹிலாரி வெற்றிபெற்று அதிபரானால் அதன் வரலாற்று முக்கியத்துவம் குறிப்பிடும்படியாக இருக்கும் என்றாலும், தற்போதைய பொருளாதார அரசியல் நடைமுறைகளில் பெரிதாக எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிட மாட்டார் என்பதையும் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்க நிலைமை
தற்போது அமெரிக்க பொருளாதார நிலைமையை பொறுத்தமட்டில் பரவாயில்லை என்கிற ரகத்தில்தான் உள்ளது. ஆகா என்று சொல்லும் நிலைமையில் இல்லை. 2008 பொருளாதார வீழ்ச்சிக்கு பின் 2009-ம் ஆண்டு வாக்கில் 10 சதவீதமாக இருந்த வேலையில்லாதவர்களின் சதவீதம் தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஊதிய உயர்வின் வீதம் 2 சதவீதம் என்கிற அளவில்தான் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும்தான் 2.5 என்கிற அளவில் உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு ஏற்றம் கண்டுள்ளது என்றாலும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் பகுதி நேர வேலைதான் செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
ஆனால் ட்ரம்ப் தரப்பு தொழிலாளர் துறையின் அறிக்கையின் அடிப்படையில் வேலை வாய்ப்பற்றவர்களின் சதவீதம் 9.7 சதவீதம் என கூறிவருகின்றனர். ஆனால் தொழிலாளர் துறை செயல்பாடுகளை டிரம்ப் குறைத்து மதிப்பிடுகிறார் என பொருளாதார அறிஞர்கள் ட்ரம்பை புறக்கணிக்க வலியுறுத்தியுள்ளனர். தவிர முக்கியமான பிரச்சினையாக பல பெரிய முதலீடுகள் பற்றாக்குறை நிலவுகிறது என ஜேபி மார்கன் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டேவிட் கெலி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த அதிபர் யாரோ?
அமெரிக்காவின் முக்கிய பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் மேற்கொண்ட கடைசி கட்ட கணிப்பில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் அடுத்த அதிபர் என்கிற கணிப்பில் ஹிலாரி 40 சதவீத புள்ளிகளையும், ட்ரம்ப் 52 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளார். அயலுறவு கொள்கைகளில் ஹிலாரி 51 சதவீதமும், ட்ரம்ப் 46 சதவீதத்தையும் பெற்றுள்ளார். உள்நாட்டு ஆயுத கலாசாரத்தை கட்டுப்படுத்துவதில் ஹிலாரி 46 சதவீத ஆதரவையும், ட்ரம்ப் 38 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளார். சர்வதேச பொருளாதார நெருக்கடிகளை கையாளுவதில் ஹிலாரிக்கு 51 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது. ட்ரம்ப் 42 சதவீதம் பெறுகிறார். அதே சமயத்தில் ஐஎஸ்ஐஎஸ் போன்ற உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல் அமைப்புகளை கையாளுவதில் ட்ரம்ப் 52 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளார். ஆனால் யார் அதிக புத்திசாலி என்கிற வகையில் ஹிலாரிக்கு 53 சதவீதம் ஆதரவும், ட்ரம்ப்க்கு 33 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. ஆனால் அதிகம் கவர்வது யார் என்கிற கணிப்பில் ஹிலாரி 39 சதவீதத்துடன் பின்தங்கி இருக்கிறார். ட்ரம்ப் 48 சதவீதம் பேரை கவர்ந்துள்ளார். ஆனால் அதிபராக இருக்க தகுதிவாய்ந்த நபர் என்கிற வகையில் ஹிலாரி 58 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளார். ட்ரம்ப் 33 சதவீதம் ஆதரவு பெறுகிறார்.
எதிரும் புதிரும்
இந்த வகையில் பார்த்தால் ட்ரம்பை விட ஹிலாரி கிளிண்டனது பொருளாதார கொள்கைகளும், ஆளுமையும், அனுபவமும் சர்வதேச உறவுகளை கையாளுவதில் திறமை பெற்றவராக இருப்பார் என்பதை அனைவருமே ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவின் உள்நாட்டும் நிலைமைகளை பொறுத்தவரையில் ட்ரம்பின் கருத்து மக்களை ஈர்ப்பதாக உள்ளது.
ஹிலாரி அதிபரானதும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவதும் கொடுப்பதை உறுதி செய்கிறார். பள்ளிக் குழந்தைகளுக்கான 100 கோடி டாலர் திட்டத்தை முன்வைத்துள்ளார். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த உதவிகளுக்கு மாகாணங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதாக குறிப்பிடுகிறார். ஹிலாரி தாராள சிந்தனை கொண்டவராகவும், ட்ரம்ப் மிதமான பழமை சிந்தனைகளிலும் இருக்கிறார். ஒபாமா கேர் என்கிற திட்டம் அமெரிக்க ஏழைகளுக்கான மருத்துவ காப்பீடை வழங்குகிறது. இதை தொடர்வேன் என்று ஹிலாரி குறிப்பிடுகிறார். இதை ட்ரம்ப் ஏற்றுக் கொள்ளவில்லை. குற்றங்களுக்கான தண்டைனையை குறைக்க வேண்டும் என்பது ஹிலாரியும், அதிகரிக்க வேண்டும் என்பது ட்ரம்பின் வாதமாகவும் உள்ளது.
பொருளாதார சார்ந்த வாதங்களிலும் ஹிலாரியின் கையே ஓங்கியுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் இருவருமே உடன்பட்டாலும், அதிக செல்வம் வைத்திருப்பவர்களுக்கு அதிகம் வரி என்கிற ஹிலாரியில் வாதத்துக்கு நேரெதிராக ட்ரம்ப் உள்ளார்.
அமெரிக்க பொருளாதாரத்தை தாங்கிப் பிடிப்பதில் மிக முக்கியமான அமைப்பு பெடரல் ரிசர்வ். அமெரிக்க பணவீக்கத்தை தக்கவைப்பதில் கடந்த சில ஆண்டுகளாகவே மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டும் என ட்ரம்ப் வாதமாக உள்ளது.
சர்வதேச நிலைமை
உலக நாடுகள் அனைத்துமே சமீப காலங்களில் பொருளாதார நெருக்கடிகளில்தான் உள்ளன. கடந்த ஆண்டில் கிரீஸ், போர்ச்சுக்கல் நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மிகப் பெரிய கடன் சுமையில் சிக்கி திவாலாகும் நிலைமைக்குச் சென்றன. ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறிய விவகாரம், கச்சா எண்ணெய் விலை ஏற்றம், சர்வதேச அளவில் உருவெடுத்துவரும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் போன்றவை உலகளாவிய அளவில் பாதிப்புகளை உண்டாக்கியுள்ளன. இரும்பு உள்ளிட்ட உலோகங்களின் விலையும் வீழ்ச்சியில் உள்ளது. இதனால் சர்வதேச அளவில் வேலையிழப்புகளும் உருவாகி வருகிறது.
இது போன்ற சர்வதேச பொருளாதார சூழ்நிலையில்தான் உலக அரசியல் அரங்கில் இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியாகவும் தனித்து முடிவெடுக்க முடியாத நிலையில் அமெரிக்க உள்ளது. பொதுவாக ட்ரம்பின் வெளியுறவு கொள்கைகள் அமெரிக்கர்களுக்கு சாதகமாக இருந்தாலும், அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்வோர்களுக்கு கெடுபிடிகள் உருவாகும். இதனால் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் சிக்கல் உருவாகும்.
ஆனால் அமெரிக்க அதிபர் சர்வதேச நாடுகளோடு எப்படி உறவுகளை பேணுவார் என்பதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அப்படி யான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய அண்ணணாக இருப்பதன் வசதியும் அதுதான்.