பாகிஸ்தானில் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்பை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி பேனர்கள் வைக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்பை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி பேனர்கள் வைக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கடந்த மாதம் அங்கிருந்து வெளியாகிற ‘டான்’ ஆங்கில நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அந்த நாட்டில் அதிகாரமிக்க ராணுவ தளபதியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஜெனரல் ரஹீல்ஷெரீப் (வயது 60) வரும் 29-ந் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இந்த தருணத்தில் ராவல்பிண்டி நகரில் பொது இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் அரசு பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறவர்கள், அரசியல் குதிப்பதற்கு 2 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காலத்தை 2 ஆண்டில் இருந்து ஒரு ஆண்டாக குறைக்க வேண்டும் என்றும், ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் 2018-ம் ஆண்டு அங்கு நடக்க உள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் பேனரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் அரசும், எதிர்க்கட்சிகளும் தங்கள் பிரிவினைவாத அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ரஹீல் ஷெரீப் 2018-ம் ஆண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட்டால், அதன்மூலம் நாட்டின் சிவில் மற்றும் ராணுவ தலைமைக்கு இடையே நல்லிணக்கம் உருவாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஹீல் ஷெரீப் தேர்தலில் போட்டியிட்டால் அவரது கட்சி, அமோக வெற்றி பெறும், அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார், அதன்மூலம் நாட்டை அவர் வெற்றிப்பாதையில் வழிநடத்திச்செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பேனர்கள், அவாமி கண்காணிப்பு குழு (ராவல்பிண்டி) உறுப்பினர் ஷேக் ரஷீத் அம்ஜத் அலி என்பவருடைய பெயரால் வெளியிடப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்புக்கு ஆதரவாக இப்படி பொது இடங்களில் பேனர்கள் வைப்பது இது புதிதல்ல.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை அமல்படுத்துமாறு ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்புக்கு வேண்டுகோள் விடுக்கும் பேனர்கள், முக்கிய நகரங்கள் அனைத்திலும் வைக்கப்பட்டன.
லாகூர், கராச்சி, பெஷாவர், குவெட்டா, ராவல்பிண்டி, பைசலாபாத் உள்ளிட்ட 13 முக்கிய நகரங்களில் இந்த பேனர்கள், ‘மூவ் ஆன் பாகிஸ்தான்’ கட்சி சார்பில் வைக்கப்பட்டது. ராணுவ சோதனை சாவடிகளுக்கு மத்தியிலும், ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளிலும்கூட இந்த பேனர்கள் வைக்கப்பட்டு, அப்போது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.