சேலத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் கோவை வாலிபர் முதலிடம்

435 0

201611070921524774_marathon-competition-coimbatore-young-men-the-first-in-salem_secvpfசேலத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் கோவை வாலிபர் முதலிடம் பிடித்தார்.பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த மாரியப்பனை பாராட்டும் விதமாக சேலம் பெஸ்ட் எஜூகேசனல் டிரஸ்ட் சார்பில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது. சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த போட்டியை கலெக்டர் சம்பத், மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் அஸ்தம்பட்டி, செரிரோடு, சுந்தர் லாட்ஜ் வழியாக சேலம் மகாத்மா காந்தி மைதானம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்தனர்.

இந்த தூரத்தை கோவையை சேர்ந்த நாகேஷ் என்ற வாலிபர் 27 நிமிடத்தில் கடந்து முதலிடம் பிடித்தார். 2-வது இடத்தை விழுப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும், 3-ம் இடத்தை இடைப்பாடியை சேர்ந்த வடிவேல் என்பவரும் பிடித்தனர். இதைத்தொடர்ந்து காந்தி மைதானத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.

இதில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மாரியப்பன் பேசும்போது, ‘ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் நம்மால் முடியுமா? முடியாதா? என்று நினைக்காதீர்கள், முடியும் என்று நம்பிக்கையோடு விளையாடினால் வெற்றி பெற்று சாதிக்கலாம்’ என்று பேசினார்.

முன்னதாக மாரியப்பன் நிருபர்களிடம் கூறும்போது, ‘சேலத்தில் பிரத்யேக சிந்தடிக் விளையாட்டு மைதானம் அமைக்க முழு முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இதற்காக அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் பேசப்பட்டு வருகிறது. விரைவில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் நான் கலந்து கொள்ள உள்ளேன். இதற்காக நான் என்னை தயார்படுத்தி கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்‘ என்றார். மாரத்தான் போட்டிக்கான ஏற்பாடுகளை பெஸ்ட் எஜூகேஷனல் டிரஸ்ட் செயலாளர் அப்துல்ரஷீத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.