3 தொகுதிகளில் தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம்

309 0

201611070804391295_3-constituency-election-deputy-military-coming-to-security_secvpfஅரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகம் வருகின்றனர்.

தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அப்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் ஏராளமான தேர்தல் முறைகேடுகள் நடந்தன. அந்த தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கியதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இந்த 2 தொகுதிகளிலும் நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதேபோல, கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ஏ.சீனிவேல், பதவி ஏற்பதற்கு முன்பே மரணமடைந்தார்.

இதையடுத்து அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் என்று 3 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் மொத்தம் 800 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 4 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்து தேர்தல் பார்வையாளர்கள் இந்த 3 தொகுதிகளுக்கும் வந்து விட்டனர். இந்த தொகுதிகளில் தமிழக போலீசாருடன் சேர்ந்து, துணை ராணுவத்தினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பு தமிழகம் வருவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை), 4 கம்பெனி துணை ராணுவத்தினர், பாதுகாப்பு பணிக்காக தமிழகத்துக்கு வருகின்றனர்.

ஒரு கம்பெனியில் 72 துணை ராணுவ வீரர்கள் இருப்பார்கள். 4 கம்பெனியில் உள்ள மொத்தம் 288 துணை ராணுவத்தினர் 3 தொகுதிகளில் தேர்தல் பணியை மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் நாளை மறுநாள் தமிழகத்துக்கு வருகிறார்கள். அன்றில் இருந்து தேர்தல் பணிகள் முடியும் வரை அவர்கள் இந்த 3 தொகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.