சென்னையிலும் அதிகரித்துவரும் காற்று மாசு

470 0

201611070924051628_chennai-too-chokes-to-soaring-air-pollution-levels_secvpfநாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தியுள்ள பாதிப்பை போலவே தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு கடந்த சில நாட்களாக பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. டெல்லியில் காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளதால் இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் 94 நகரங்களில் காற்று மாசுபாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காற்று மாசுபாடு அடைந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதில் காற்று மாசுபாட்டில் மோசமாக உள்ள நகரங்களில் முதல் 20 இடங்களில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் நாட்டின் 94 நகரங்களில் சுவாசிக்கும் காற்று தரமானதாக இல்லை என தெரியவந்துள்ளது.தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலும் காற்றின்மாசு அதிகரித்துகொண்டே வருகிறது. குறிப்பாக, நேற்றுமாலை 6 மணி நிலவரப்படி சென்னை ஆலந்தூர், கிண்டி, அண்ணா சாலை, மணலி ஆகிய பகுதிகளில் காணப்படும் காற்றுமாசின் அதிகபட்ச அளவானது 2.5 (2.5 மைக்ரான் அளவிலான திடப்பொருள் கலவை கொண்டது) அலகாக உள்ளது.

இந்த அளவானது, சிறு குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி நோய், சுவாசப்பை கோளாறுகள் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுள்ள முதியவர்களின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையின்போது கொளுத்தப்பட்ட பட்டாசுகளால் சென்னையில் ஏற்பட்ட காற்று மாசு டெல்லியைவிட குறைவுதான் என்றாலும் வாகனப்புகை மற்றும் சாலையோரம் குவிந்து கிடக்கும் மண்தூசி போன்றவை சென்னையில் புகை மற்றும் தூசி மண்டலம் உருவாக காரணிகளாக உள்ளன.

தற்போது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் பனியால் இந்த தூசியின் மாசுபாடு அவ்வளவு எளிதாக காற்றில் கலந்து வெளியேற முடியாத வகையில் பனிப்போர்வைக்குள் சிக்கிக் கொள்வதால் காலை வேளைகளில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும், நடைபயிற்சிக்கு செல்லும் முதியவர்களும் மூச்சுத்திணறலால் பெரிதும் சிரமப்பட நேர்கிறது.

வெகுகுறிப்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள ஈ.வி.கே. சம்பத் சாலையில் சில மாதங்களுக்கு முன்னால் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்தப் பணிகளுக்காக சாலையோரம் பள்ளம் எடுப்பதற்காக தோண்டப்பட்ட மண்ணின் பெரும்பகுதி, இங்கிருந்து வெளியேற்றப்படாமல் மண்டிக்கிடப்பதால், இவ்வழியாக செல்லும் வாகனங்களின் வேகத்தால் உண்டாகும் காற்றில், இந்த மண்குவியல் புழுதி மண்டலத்தை உருவாக்கி வருவதை மாநகராட்சி நிர்வாகமோ, சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ கண்டுகொண்டதாக தெரியவில்லை.