வேலூரில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது- பொன்.ராதாகிருஷ்ணன்

318 0

201611071035032512_pon-radhakrishnan-says-hindu-organization-attack-plot_secvpfஇந்து அமைப்பு பிரமுகர்களுக்கு எதிராக வேலூரில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தரைவழி மற்றும் கப்பல் துறை போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர். கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக வேலூரில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது.

ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்த்ரெட்டி பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். பின்னர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து இந்து முன்னணியின் வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ் வீட்டில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

மேலும் வேலூரில் சிலர் வீடுகளிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் திண்டுக்கல், கோவை, சென்னை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்து முன்னணி பிரமுகர் மகேஷ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் அந்த வழக்கில் முறையான விசாரணை செய்து குற்றவாளியை பிடிக்காதது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து உண்மையான குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதான்கோட் விமானதளத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிகழ்வை ஒளிபரப்பு செய்தமைக்காக தனியார் தொலைக்காட்சிக்கு 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்டதை சாதாரண வி‌ஷயங்களோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ராணுவம் சம்பந்தப்பட்ட வி‌ஷயங்களை வெளியிடுவது நாட்டில் உள்ள 125 கோடி மக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பதாகும். பத்திரிகை துறைக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசில் முழு சுதந்திரம் உண்டு.

பொதுசிவில் சட்டம், மத்திய அரசால் யார் மீதும் திணிப்பது கிடையாது. காலத்திற்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அதுபோன்று தான் பொது சிவில் சட்டமும். சுதந்திரம், பெண் விடுதலை போன்றவற்றிற்காக சாதிபேதமின்றி ஒட்டுமொத்த கருத்தாக பேசுகிறோம். அதுபோல இதையும் ஏன் பொது வார்த்தைகளால் பேசப்படவில்லை என்பது என் கேள்வி.

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தியின் போராட்டத்தை தடுக்க நினைப்பது மனித உரிமை மீறல் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவிப்பதன் மூலம் கூட்டணி கடமையை செய்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.

தமிழகத்தில் வருகிற பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். இது குறித்து தொடர்ந்து மந்திரிகளிடம் பேசி வருகிறேன். மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக நாளை (இன்று) டெல்லி செல்ல உள்ளேன். தமிழகத்தில் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.