டி.பி.எஸ். ஜெயராஜ் அண்ணா குறித்து சென்ற இதழில் எழுதியது எந்த உள்நோக்கத்தையும் கொண்டதல்ல! என்னுடைய விமர்சனங்களும் கேள்விகளும் ஒளிவுமறைவில்லாதவை. 2 மாணவர்களைச் சுட்டுக்கொன்று விட்டு அதை மூடிமறைக்கப் பார்க்கிறது சிங்களக் காவல்துறை. அவர்களைக் காப்பாற்றப் பார்க்கிற ஜெயராஜ் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அபத்தமான வாதங்களை முன்வைக்கிறார். அந்த மோசடியை வேடிக்கை பார்க்கச் சொல்கிறார்களா என் நண்பர்கள்?
ஜெயராஜ் ஒரு மூத்த பத்திரிகையாளர் – என்று சுட்டிக்காட்டுகிற நண்பர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றைத்தான்! மூத்த பத்திரிகையாளர் என்பதால் ஒரு படுகொலையை மூடி மறைக்கும் முயற்சிக்கு முட்டுக்கொடுக்கும் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தே ஆகவேண்டும் என்கிறீர்களா?
தனிப்பட்ட முறையில் எந்த விதத்திலும் ஜெ அண்ணா எனது இலக்கல்ல! அதனால்தான் அவர் சுமந்திரனின் மைத்துனர் என்பதைக் கூட எந்த இடத்திலும் நான் குறிப்பிடவில்லை.
‘மாணவர்கள் படுகொலை தொடர்பில் நேர்மையான விசாரணை நடத்தப்படும் – என்று அதிபர் மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதி இருண்ட வானில் தெரிகிற ஒளிக்கீற்று’ என்கிற ஜெயராஜின் போலிப் புல்லரிப்பு உண்மை நிலவரங்களை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் எவருக்கும் எரிச்சலைத்தான் ஏற்படுத்தும். எனக்கும் அப்படியே!
மைத்திரியின் புத்திர சிகாமணியான தகம் சிறிசேனா அடித்த கூத்தும் அதுதொடர்பான மைத்திரியின் பேத்துமாத்தும் ஜெ அண்ணாவுக்குத் தெரியுமா என்று நான் கேட்டது அதனால்தான்!
அக்டோபர் 8ம் தேதி பின்னிரவில் கொழும்பு ‘கிளிக்’ கேளிக்கை கிளப்புக்குச் செல்கிறார்கள் தகம்சிறிசேனாவும் அவனது நண்பர்களும்! அவர்கள் உள்ளேபோக அனுமதி கிடைக்கவில்லை. அவரது பாதுகாப்புக்கு வந்திருந்த அதிபர் பாதுகாப்புப் பிரிவு காவலர்கள் வந்திருப்பவர் யார் என்பதை எடுத்துச் சொன்ன பிறகும் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள் கிளப் பாதுகாவலர்கள். அதற்கு கிளப் விதிமுறைகளோ தகம் குழுவினர் அப்போதிருந்த ‘நிலை’யோ காரணமாக இருந்திருக்கக் கூடும்.
அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்ட தகம் கோஷ்டி போனவேகத்தில் இரும்புத்தடிகளுடன் திரும்பிவந்தது. கேளிக்கை விடுதியின் காவலர்களை வெறிபிடித்தவர்களைப் போல் விரட்டி விரட்டித் தாக்கியது. சிசிடிவி-யில் அந்தத் தாக்குதல் பதிவாகியிருக்கிறது.
சம்பவம் நடந்தபோது வெளிநாட்டிலிருந்த மைத்திரிபாலா கொழும்பு திரும்பியதும் கிளிக் கிளப் சம்பவம் தொடர்பாக முழுமையான நேர்மையான விசாரணை நடக்கும் என்று உறுதியளித்தார்.
அந்த விசாரணையின் லட்சணம் என்ன? இன்றுவரை தகம் சிறிசேனா மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை அவரிடம் வாக்குமூலம் வாங்க முயற்சி கூட எடுக்கப்படவில்லை.
சம்பவம் நடந்த கேளிக்கை விடுதியின் வெளிப்புறத்தில் பிரகாசமான விளக்குகள் உள்ளன. ஒன்றுக்கு இரண்டு சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளன. அப்படியிருந்தும் இரும்புத்தடிகளால் தாக்கப்பட்ட விடுதியின் காவலர் ‘என்னைத் தாக்கியவர்களை அடையாளம் காண்பது இயலாத ஒன்று’ என்கிறார் இப்போது. அதைவிட ஒருபடி மேலே போய் அந்தத் தாக்குதலில் எந்த VIP யின்யின் மகனும் சம்பந்தப்படவில்லை’ என்று தானாகவே முன்வந்து அறிவிக்கிறது கிளப் நிர்வாகம்.
மைத்திரிபாலா சொல்லும் முழுமையான நேர்மையான விசாரணை எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணம் இது. ஜெயராஜ் அண்ணா கனவு காண்பதைப்போல இருண்ட வானில் தெரிகிற ஒளிக்கீற்றாக அது இருக்க வாய்ப்பேயில்லை.
அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றுகுவிப்பது நியாயமா என்று கேட்டதற்காகவே கோதபாய கும்பலால் கொல்லப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவுக்கும் தமிழ் மக்களைக் கொல்ல ரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப் பட்டதை அம்பலப்படுத்தியதற்காகவே கடத்தப்பட்டு காணாமலேயே ஆக்கப்பட்டுவிட்ட பிரகீத் ஏக்னலிகோடாவுக்கும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. இருவருமே சிங்கள இனத்தவர் இருவருமே பத்திரிகையாளர்கள். இருவரது விஷயத்திலும் சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளைக் காப்பாற்றத்தான் மைத்திரி அரசு முயல்கிறது.
லசந்தவின் தொலைபேசி மற்றும் அலைபேசியை ஒட்டுக் கேட்க மகிந்த ராஜபக்ச அரசு உத்தரவிட்டிருந்தது இப்போதுதான் அம்பலமாகியிருக்கிறது.
2009 ஜனவரி 8ம் தேதி தனது சன்டே லீடர் பத்திரிகை அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் கொழும்பு நகரின் அட்டிடியா பகுதியில் சுட்டுக் கொல்லப்படுகிறார் லசந்த. அதற்கு சரியாக நான்கு மாதங்களுக்கு முன் 2008 செப்டம்பர் 10ம் தேதி லசந்தவின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பதற்கான உத்தரவை ‘அரச வேவுச் சேவை’ (State Intelligence Service) பிறப்பித்திருக்கிறது. அதன் ஒட்டுக்கேட்புப் பட்டியலில் லசந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் அரசியல்வாதிகள்.
இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் மைத்திரிக்கு முன்னதாகவே தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் லசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரியை பெயிலில் விடுவிப்பதில்தான் குறியாக இருந்திருக்கிறார். அது விசாரணையை பாதிக்கும் என்பது தெரிந்தே நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன் ‘லசந்த விக்கிரமதுங்கவைக் கொன்றது நான்தான்’ என்று எழுதிவைத்துவிட்டு லந்தரிக் ஜெயமனா என்கிற முன்னாள் ராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதுவே ஒரு FOUL PLAY என்று கருதப்படுகிறது.
பட்டப்பகலில் லசந்தவைச் சுட்டுக்கொன்றவர்கள் இருவர். ஆனால் தான் மட்டுமே கொலையாளி என்கிற பிழையான தகவலைத் தெரிவித்திருக்கிறார் ஜெயமனா. உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகவே அவர்களது தூண்டுதலின் பேரில் ஜெயமனா இதைச் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து மைத்திரி வாயே திறக்கவில்லை.
இந்தவாரம் ஜெயமனா குறித்த அடுத்த தகவல் வெளியாகியிருக்கிறது. லசந்த சுட்டுக்கொல்லப்பட்ட சமயத்தில் அந்தச் சம்பவம் நடந்த இடத்திலேயே ஜெயமனா இருக்கவில்லை என்பது இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்தது அட்டிடியா பகுதியில்! அந்தச் சமயத்தில் பின்னவலா என்கிற வேறொரு பகுதியில் இருந்திருக்கிறார் ஜெயமனா.
கொல்லப்படுவதற்கு 4 மாதம் முன் லசந்தவின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது. கொல்லப்படுவதற்கு 10 நாள் முன் அவரது அலுவலகம் தாக்கப்படுகிறது. கொலை நடந்த இடத்தில் ஜெயமனா என்பவர் இல்லவே இல்லை. ஆனால் ‘நான்தான் கொலையாளி’ என்று தெரிவித்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார். இந்த மர்மங்களின் பின்னணி என்ன? யாரைக் காப்பாற்ற இவ்வளவும் நடக்கிறது?
கூட்டிக் கழித்துப் பார்த்தால் லசந்தவைக் கொல்ல உத்தரவிட்டவர்களைக் காப்பாற்றத்தான் இவ்வளவு நாடகமும் நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
‘ஒரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டை இனப்படுகொலையின் தொடர்ச்சி – என்றெல்லாம் சொல்லிவிடாதீர்கள்’ என்று நமக்குப் போதிக்கிற ஜெயராஜ் அண்ணா போன்றவர்கள் லசந்த என்கிற சக பத்திரிகையாளன் மரணத்திலிருக்கும் மர்மம் இன்னும் விலகாததையும் அந்தக் கொலையின் தொடர்ச்சிதான் ஜெயமனா படுகொலை என்பதையுமாவது வெளிப்படையாகப் பேச வேண்டாமா?
ஜெ அண்ணா போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் தங்களது சொந்த இனமான தமிழின அழிப்பு குறித்தும் பேச மாட்டார்கள் சொந்தத் துறையான ஊடகத் துறையைச் சேர்ந்த லசந்தவின் படுகொலை தொடர்பாகவும் பேச மாட்டார்கள் என்றால் வேறு யாருக்காகத்தான் பேசப் போகிறார்கள்?
சுலக்சன் – கஜன் என்கிற 2 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது அராஜகம். அதை மூடி மறைக்க முயன்றது அதைக்காட்டிலும் அராஜகம். அதைத் திசை திருப்பும் விதத்தில் ‘போலீசார் மீது மோதுவதைப் போல வந்ததால்தான் சுட்டிருக்கிறார்கள்’ – என்று எழுதுவது அராஜகத்தினும் அராஜகம்.
இந்த அராஜகப் போக்கை இலங்கையின் இடதுசாரிச் சிந்தனையாளர்களில் ஒருவரான சுரேந்திர அஜீத் ரூபசிங்க பகிரங்கமாகக் கண்டித்திருக்கிறார். அவர் ஜெயராஜ் அண்ணா போல் தமிழர் கூட கிடையாது. சிங்களவர்.
‘இந்த மூடிமறைப்பு வேலையில் உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் மைத்திரி-ரணில் வரை அத்தனை பேருக்கும் பொறுப்பிருக்கிறது’ என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறார் சுரேந்திர. 2009 மனித உரிமை மீறல்கள் முதல் இந்தத் துப்பாக்கிச்சூடு வரை குற்றவாளிகளைக் காப்பாற்ற நடக்கிற முயற்சிகளைக் கண்டிக்கிற அவர் அதுவும் இதுவும் ஒன்றுதான் என்கிறார். ஜெயராஜ்களோ அதையும் இதையும் ஒப்பிடாதே என்கிறார்கள்.
தமிழர்களை அந்நியரைப்போல் நடத்துகிற வரை அவர்களை ராணுவத்தின் மூலமாகக் கண்காணித்துக் கொண்டே இருக்கிற வரை அவர்கள் எப்படித் தங்களை இலங்கையராக உணர்வார்கள் – என்கிற கேள்வியில் இருக்கிற நியாயம் ஜெயராஜ் போன்றவர்களுக்கு ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை.
வடகிழக்கில் ஐந்து பேருக்கு ஒரு சிப்பாய் என்கிற அளவுக்கு ராணுவம் குவிக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களை அச்சத்திலேயே வைத்திருக்கிறது. இனம் தெரியாத எதிரிகள் தங்களைச் சுற்றிலும் இருக்கிறார்கள் என்கிற பீதி ராணுவத்தையும் பதற்றத்திலேயே வைத்திருக்கிறது. இந்த பரஸ்பர அச்சம் நல்லிணக்கம் உருவாக எப்படி உதவும் – என்கிற கேள்வி மிக மிக வெளிப்படையான கேள்வி. இதைத்தான் சுரேந்திரவும் கேட்கிறார்.
தமிழின அழிப்பு முதல் சுலக்சன் – கஜன் விவகாரம் வரை குற்றவாளிகளைக் காப்பாற்ற நடக்கிற முயற்சிகள் குறித்து சுரேந்திர கேள்வி கேட்கிறார். சிங்கள மேலாதிக்க மனோபாவம் மாறாமல் இதெல்லாம் மாறாது என்கிறார்.
‘ஆட்சியையும் தலைவர்களையும் மாற்றும் தேர்தல் முடிவுகளால் எந்தப் பயனும் இல்லை…. நாட்டின் அடிப்படை குணமான பேரினவாத மேலாதிக்க மனோநிலை மாறுவதுதான் முக்கியம்… தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி கொடுப்பது மட்டுமே சுயகௌரவத்துடனும் சமஉரிமைகளுடனும் அவர்கள் பாதுகாப்பாக அமைதியாக வாழ வழிவகுக்கும்’ என்கிறார் சுரேந்திர. புதிய அரசியல் யாப்பு குறித்து கதைக்கும் ஒவ்வொருவரும் இதைக் கவனிக்கக் கடவது!
2009ல் ராஜபக்ச அரசு தமிழினப்படுகொலையை நடத்திக் கொண்டிருந்தபோதே அதைக் கண்டித்தவர் சுரேந்திர. சிங்கள இனவெறிதான் தமிழீழக் கோரிக்கைக்கு அடிப்படை என்பதை எடுத்துச் சொன்னவர். அப்போது பெங்களூருவில் நடந்த மனித உரிமை நிகழ்வில் கலந்துகொண்டு அவர் பேசியதை மறக்காமல் நினைவுகூர்கிறார் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ – திரைப்படத்தின் இயக்குநர் கு.கணேசன். சுரேந்திர கலந்துகொண்ட பெங்களூரு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் மூர்த்தி என்கிற மனித உரிமைச் செயற்பாட்டாளருடன் இணைந்து நின்றவர் அவர்.
சிங்களப் பேரினவாதம் தான் இலங்கையை நாசமாக்குகிறது….. தமிழர் பகுதிகளில் ராணுவம் நிற்கிறவரை அமைதி திரும்பாது…. சிங்கள மேலாதிக்க மனோபாவம் நீடிக்கிறவரை தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கமுடியாது…. சுயநிர்ணய உரிமை ஒன்றைத் தவிர வேறு தீர்வு கிடையாது…… என்கிறார்கள் மனசாட்சியுடன் பேசுகிற சுரேந்திர போன்றவர்கள். இந்தத் துணிவும் தெளிவும் ஜெ அண்ணா போன்ற பச்சைத் தமிழர்களிடம் மருந்துக்குக் கூட இல்லையே ஏன்?