இன்று
யாழ்ப்பாணத்தில் ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை யாழப்பாணம் மருதனார்மடம் பகுதியில் வாள்வெட்டுக்குழு அல்லது ஆவா குழு என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர் பயங்கரவாதத் தடுப்பு பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திரகுமார் கபில் உசாந்தன், இந்திரகுமார் நிறோசன், செல்வராசா விதுஷன் ஆகிய மூவருமே பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் சுன்னாகப் பகுதியில் பொலிசார் மீது வாள்வெட்டு மற்றும் அப்பகுதியில் நடைபெறுகின்ற வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சிவலிங்கம் கபில்நாத், திருநெல்வேலியைச் சேர்ந்த கெங்காதாரன் பிருந்தாபன், சில்லாலைப் பகுதியைச் சேர்ந்த அலக்ஸ் அரவிந்தன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சில்லாலையைச் சேர்ந்த அலெக்ஸ் அரவிந்தன் யாழ்ப்பாண அரசியல் கட்சியைச் சேர்ந்தவரின் வீட்டில் கடமைபுரிவதாகவும், அறியமுடிகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பிலிருந்து வருகை தந்த பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டதாக அறிய முடிகிறது.
இக்கைது தொடர்பாக பெற்றோர், உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மொத்தமாக ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.