யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனான கிளிநொச்சி நடராசா கஜனின் இல்லத்திற்க்கு இன்று(6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் நேரில் சென்று தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி சரியான தீர்வினை பெற்றுத்தருவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் இரா. சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது,மாணவர்களின் கொலையை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். தற்போது இந்த சம்பவத்தின் கொலைக் குற்றவாளிகள் நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
அதேவேளை இப்போது நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவசரமாக செய்யவேண்டிய பல காரியங்கள் உண்டு குறிப்பாக இந்த இரண்டு மாணவர்களும் வீட்டில் பொறுப்பு வாய்ந்தவர்களாக இருந்தவர்கள். எனவே இவர்களின் குடும்பங்களுக்கு சரியான இழப்பிடுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு உண்டு.
அதை நாங்கள் முடிந்தளவு சம்பந்தபட்டவர்களிடம் கலந்துரைாயடி பெற்றுக்கொடுப்போம். ஆனாலும் நீதியின் தீர்ப்பு நியாயமானதாக கிடைக்க வேண்டும் இதற்காக நாங்கள் தொடர்ந்து குரல்கொடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள் தொண்டர்கள் எனப் பலர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.