இந்திய -இலங்கை மீனவர்கள் தொடர்பான ராஜதந்திர பேச்சுவார்தை முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கங்கள் எட்டப்பட்டதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் இழுவைப்படகுகளை அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை இந்திய அரசாங்கம் இந்தக்கலந்துரையாடலின் போது எடுத்தது இது முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இதனை தவிர தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டுவதை தடுக்கும் முகமாக புதிய கருவிகளை பயன்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.
இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இந்திய அரசாங்க தரப்பு கோரியபோது இலங்கை தரப்பு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அடுத்தடுத்த பேச்சுக்களின் போது இதனை பற்றி கலந்தாலோசிக்க இணங்கப்பட்டது.
இதேவேளை இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்கும் முகமாக அமைச்சு செயலாளர்கள் மட்டத்தில் குழு ஒன்றும் இன்று அமைக்கப்பட்டது என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.
இன்றைய பேச்சுவார்த்தையில் இலங்கை சார்பில் வெளிவிகார அமைச்சர்களான மங்கள சமரவீர, மகிந்த அமரவீர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தியாவின் சார்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், கடற்றொழிலுக்கு பொறுப்பான அமைச்சர் ராதா மோகன்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் ராஜதந்திர ரீதியான இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தை ஜனவரி 2ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக இந்திய அமைச்சர் ராதாமோகன்சிங் தலைமையிலான குழுவினர் இலங்கை வரவுள்ளனர்.