தற்கொலை, அதிர்ச்சியால் இறந்த 3 விவசாயிகள் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியதைப் பார்த்து தாங்க முடியாத சோகத்தில் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் முருகதாஸ் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள ஆதிச்சபுரத்தைச் சேர்ந்த அழகேசன் இரண்டு ஏக்கர் குத்தகை நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், காவிரி கடைமடைப் பகுதி வரையில் அரிச்சந்திரா ஆற்றில் வராததால், வயலில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் முளைக்கவில்லை.
நவம்பர் 4-ம் தேதி வயலுக்குச் சென்ற அழகேசன் மனக்கவலையில் வேதனையுடன் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள கீழத்திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ் கண்ணன் இரண்டு ஏக்கர் குத்தகை நிலத்தில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்த பயிர்கள் கருகியதைக் கண்டு வயலிலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
தமிழக விவசாயிகளின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில், கடன் தொல்லையிலிருந்து அவர்களைக் காக்க மாநில அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். கூட்டுறவுக் கடனைத் தள்ளுபடி செய்ததைப் போன்று, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் பாரபட்சம் பாராமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயி கோவிந்த ராஜ், அதிர்ச்சியால் உயிரிழந்த விவசாயிகள் அழகேசன், ராஜேஸ் கண்ணன் ஆகியோர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.