ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியருகே பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மண்ணுக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாத முகாம்களின்மீது நமது ராணுவ வீரர்கள் நடத்திய ஆவேச தாக்குதலுக்கு பிறகு பலமுறை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளின்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள தார்குன்டி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இருமுறை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தந்தனர்.
இன்று அதிகாலை சுமார் 2 மணியில் இருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியருகே உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்திய வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்திவரும் நிலையில் இருதரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.