பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாகிஸ்தான் நாட்டிலிருந்து கடல் போக்குவரத்து மூலம் இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் சிமெண்ட் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சென்னை, தூத்துக்குடி துறைமுகத்துக்கு மாதம் தோறும் சுமார் 10 இலட்சம் மூட்டைகளில் பாகிஸ்தான் நாட்டு சிமெண்ட் இறக்குமதியாகிறது. இந்த சிமெண்ட்டின் தரம் நம் நாட்டில் தயாரிக்கப்படும் சிமெண்ட்டின் தரத்தை விட குறைவானது.
பாகிஸ்தான் சிமெண்ட் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தூத்துக்குடி, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு, உபயோகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு தரம் குறைந்த சிமெண்டை பயன்படுத்தினால் கட்டிடம் சேதமடைந்து, பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
பாகிஸ்தான் நாட்டின் சிமெண்ட்டை பயன்படுத்தும் போது நம் நாட்டில் தயாரிக்கப்படும் சிமெண்ட்டின் விற்பனை குறைந்து, பொருளாதார முன்னேற்றம் தடைபடும்.
எனவே இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நல்ல சுமூக நட்புறவு ஏற்படும் வரை பாகிஸ்தான் சிமெண்ட் உட்பட அந்நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு பொருளும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதை தற்காலிகமாக தடை செய்ய மத்திய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.