பிரிட்டன் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபோற்சவ (பான்ஃபயர்) விழாவில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நாட்டு பாராளுமன்ற கட்டிடத்தை கடந்த 1605-ம் ஆண்டு வெடிவைத்து தகர்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் அந்நாட்டில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 5-ம் தேதி ’பான்ஃபயர் நைட்’ என்ற பெயரில் தீபோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெறும் இவ்விழாவில் இடம்பெறும் வாணவேடிக்கைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை கண்டு மக்கள் களிப்படைவதுண்டு.
அவ்வகையில், தலைநகர் லண்டனில் இருந்து தெற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஏடென்பிரிட்ஜ் பகுதியில் நடைபெற்ற தீபோற்சவ விழாவில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் 36 அடிஉயர கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது.
இதேபோல், லேவேஸ் நகரிலும் மெக்சிகோ எல்லைப்பகுதி மதில்சுவரின் மீது டொனால்ட் டிரம்ப் அமர்ந்திருப்பதைப்போன்ற மற்றொரு கொடும்பாவி எரிப்பதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.