அடிப்படைவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் பாராளுமன்றம் எவ்விதத்திலும் நாட்டுக்கு ஒவ்வாது. ஒரு ஸ்தீரத்தன்மையுடைய மக்களுக்குப்பொறுப்புக்கூறக்கூடிய பாராளுமன்றம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது அக்கிராசன உரையில் தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டின் அரசியலமைப்பிலும் தேர்தல் முறைமையிலும் கட்டாய திருத்தங்கள் அவசியமெனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இன்று (03.01.2020 ) வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
அந்தவகையில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.
சபையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் கோட்டை ஆனந்த பாலிகா வித்தியாலய மாணவியர் ஜயமங்கள கீதம் இசைத்தனர்.
இதையடுத்து பாராளுமன்றில் தனது அக்கிராசன உரையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நிகழ்த்தினார்.
அந்த உரையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
இனவாத அரசியலுக்கு நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதனை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
பௌத்த மதத்தை பாதுகாத்து ஏனைய மதங்களுக்கான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் நான் ஜனாதிபதியென்ற ரீதியில் உறுதி செய்வேன்.
தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. புலனாய்வுப்பிரிவு முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் , அடிப்படைவாதம் மற்றும் பாதாள குழுக்கள் முற்றாக இல்லாதொழிக்கப்படும்.
மக்கள் நலன் திட்டங்கள் குறித்து நான் நேரடியாக கண்காணிப்பேன். அத்துடன் நாட்டில் வறுமையொழிப்பு என்பது எனது ஆட்சியில் மற்றுமொரு இலக்காகக் காணப்படுகின்றது.
ஊழல் மோசடிக்ளுக்கு எதிராக எனது ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகநகர் திட்டங்கள் அனைத்துமே தெற்காசியாவின் கேந்திரநிலையமாக இலங்கைகை கொண்டுவருவதற்கான இலக்காகவே அமையப்பெற்றுள்ளன.
அரசியலமைப்பிலும் தேர்தல் முறைமையிலும் கட்டாய திருத்தங்கள் அவசியம். 1978 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 19 தடவைகள் அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அரசியல் அமைப்பில் ஒரு ஸ்திரமற்ற மன்மை காணப்படுகின்றமையால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. நாட்டின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும் . ஆகவே அரசியலமைப்பில் கட்டாய திருத்தங்கள் செய்யப்படவேண்ம் . மறுபுறம் தேர்தல் மறைமையிலும் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகியுள்ளது என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இதன் பின்னர் பாராளுமன்றம் இன்றைய அமர்வுகளுக்காக பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.