இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண இணக்கப்பாட்டு குழுவொன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதுடில்லியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ராஜதந்திர பேச்சுவார்த்தையின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த இணக்கப்பட்டு குழு எதிர்வரும் மாதங்களில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள ராஜதந்திர பேச்சுவார்த்தை சிறந்த நன்மையை தரும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.
அண்ணா திமுகவின் பேச்சாளர் சி ஆர் சரஸ்வதி இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் அவசியம் என்பதை ஏற்கனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமும் டெல்லியிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று புதுடில்லியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ராஜதந்திர பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நேற்றைய பேச்சு வார்த்தை வெற்றியளித்துள்ளதாக இலங்கையில் கடற்றெழில்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கை வந்து, மீண்டும் இது தொடர்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.