யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக் கட்டியெழுப்பவும் கடந்த காலங்களில் வடக்கு மாகாண மக்களுக்கு கிடைக்காதவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு உள்ளங்களில் இருக்கும் அளுத்தங்கள் இறுக்கங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இதய சுத்தியுடனும் திறந்த மனத்துடனும் குறைகள் தவறுகளை நேரில் சுட்டிக்காட்டுபவர்களாக என்னுடன் இணையுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநராக இன்று உத்தியோக பூர்வமாக கடமை ஏற்றுக் கொண்ட பின்னர் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
வவுனியா மாவட்டத்தில் இருந்து அரசாங்க அதிபராக வெளியேறியபோது லேசான இதயத்துடன் வெளியேறியிருந்தேன். ஏனெனில் எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளை நிறைவாக செய்தே வெளியேறியுள்ளேன்.பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தேன் அதன் மகிழ்ச்சி மனதை இலோசாக்கியிருந்தது. இன்று வவுனியா மாவட்டத்தின் ஆரம்ப இடத்தை மிதித்திருந்தபோது மக்கள் காட்டிய அன்பும் அவர்களின் ஆதங்கமும் மனதில் இருந்த பல கவலைகளும் அவர்கள் காட்டிய ஆதரவும் அதேபோல் ஆளுநர் அலுவலகத்திற்கு வந்தபோது எதிர்பார்த்திருக்காத அளவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவைத்தலைவர் முதல்வர் மற்றும் உங்களது வரவேற்பு என் இதயைத்தை கனமாக்கியுள்ளது.
ஆளுநர் பதவி இலேசான பதவியல்ல கடந்த ஒன்றரை மாத காலமாக புதிய ஜனாதிபதி பதவியேற்றதில் இருந்து பல போராட்டம் இடம்பெற்று வருகின்றது இதனை ஊடகங்கள் ஊடாக நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் பலர் தொலைபேசி ஊடாக இது உண்மையாகவா இது நடக்குமா எனக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் என்னுடைய நிர்வாக சேவையில் இருந்து ஓய்வு பெறவில்லை. அண்மையில் கிடைக்கப்பெற்ற பதவியின் பொறுப்புக்களை ஆரம்பித்திருந்தேன் எனவே ஆளுநர் பதவி என்ற விடயத்தில் அரச அதிகாரியாக நிதானமாக சிந்திக்கவேண்டிய தேவை இருந்தது ஏறக்குறைய 35 வருட அரச சேவையில் இருந்த நான் கடைசிக்காலத்தில் நிறைவேற்றாது வெளியேறுவது என்பது எவ்வாறு இருக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியதன் பலனாக எனக்குரிய அத்தனை விடயங்களையும் தாங்கள் கவனத்தில் கொள்வதாக ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக என்னுடைய சேவைக்கான நன்மைகளைப் பாதுகாத்துக்கொண்டு எனக்கு இந்தப் பதவியை தந்துள்ளார். ஏன் இந்தப் பதவி என்பது எனக்காக மட்டுமன்றி அல்லது நான் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல வடக்கு மாகாண மக்களின் உணர்வுகளுக்காக மக்களின் தேவைகளுக்காக ஏக்கங்களுக்காக ஜனாதிபதியால் தரப்பட்ட பதவியாகத்தான் இதனைப் பார்க்கின்றேன்.
எனவே நான் பதவியேற்றபோது எனக்குக் கூறப்பட்ட விடயம் வடமாகாண மக்கள் நிறைய வேதனைகளுடனும் வலிகளுடனும் காயங்களுடனும் இருக்கின்றார்கள். அவற்றை ஆற்றுப்படுத்தவேண்டிய தேவைதான் இருக்கின்றது.அந்த மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ இது வரை என்ன கிடைக்காமல் உள்ள விடையங்களை அவற்றைஎல்லாம் செய்து முடிப்பதற்கான அதிகாரத்தையும் அதற்கான ஒத்துழைப்புக்களையும் ஜனாதிபதி செயலகம் செய்யும் என்ற உத்தரவாதத்துடன் தான் இங்கு வந்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர் கூறியது போல இந்த மண்ணின் நாடித்துடிப்புக்களை .மக்களின் உள்ளங்களை அறிந்து வைத்துள்ளேன் அரசாங்க உத்தியோகத்தர்களின் சிக்கல்களை அறிந்துள்ளேன்.
வவுனியா மாட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மூன்றரை இலட்சம் மக்களையும் வவுனியா மாவட்ட மக்களையும் சேர்த்து நான்கரை இலட்சம் மக்களை அந்நியோன்னியமாகப் பார்த்திருக்கின்றேன். எனவே இந்த மாகாணத்தில் இருக்கின்ற பலருக்கு என்னைத் தெரியும் எனக்கும் பலரைத் தெரியும் அப்படியிருந்தும் கடந்த எட்டரை வருடங்களாக இந்த மாகாணத்திற்கோ அல்லது வவுனியா மாவட்டத்திற்கோ என்னால் வரமுடியாது போய்விட்டது. அதற்கான தேவை இருந்தபோதும் கடமையின் நிமித்தம் வரமுடியாது இருந்தது. சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நான் விரும்பாமலே அந்தப் பதவி தரப்பட்டது. வருமானத்தின் 67 வீத வருமானத்தை பெறக்கூடிய சுங்கத்திணைக்களத்தில் 2019 ஆம் ஆண்டு சுங்கத்திணைக்களத்தின் வரலாற்றில் 975 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டிக்கொடுத்த அதேநேரம் என்னை இடமாற்றுவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு எதிராக வீதியில் இறங்கிய என்னுடைய உத்தியோகத்தர்கள் நான் தடுத்தும் அதனைக்கேளாது போராட்டங்களில் ஈடுபட்டு கொழும்பு மாநகரையே ஸ்தம்பிதநிலைக்குக் கொண்டு வந்து மீண்டும் அமைச்சரவைப் பத்திரத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கு வழிசமைத்து மீண்டும் அப்பதவியில் என்னை அமர்த்தினார்கள் இப்போது இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டபோது உங்களுக்கான பதவி உயர்வு என்பதாலேயே நாங்கள் அமைதியாக உங்களை அனுப்பி வைக்கின்றோம் என்றார்கள்.
பின்னர் அமைச்சின் செயலாளராக பதவி ஏற்ற நிலையில் ஜனாதிபதியின் செயலாளர்களில் எத்தனையோ செயலாளர்கள் இருக்கும் நிலையில் எனக்கேன் இந்தப் பதவியைத் தந்தீர்கள் என்று கேட்டதற்கு அதற்கு சுகாதார அமைச்சில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான ஆளைத்தான் நியமித்துள்ளார். இதைப்பற்றிக் கதைப்பதற்கு ஒருவரும் இல்லை என்றார்.
குறித்த பதவியை ஏற்று நான் அங்கு சென்றபோது மருத்துவர் சங்கம் ஒரு புறம் தாதியர் சங்கம் ஒரு புறம் என பல பிரச்சினைகளை முன்வைத்தார்கள். சுமார் ஒரு மாத காலத்திற்கு அவற்றில் 70 வீதமான பிரச்சினைகளை தீர்த்து வைத்துவிட்டுத்தான்.இங்கு வந்துள்ளேன் அதில் ஒருரே ஒரு வேதனை தற்போது அமைச்சரவை அனுமதிக்கப்பட்டு அமைச்சரவைப் பத்திரம் தயாரிகக்ப்பட்டுக்கொண்டிருக்கின்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடப்பிரிவு வவுனியா முல்லைத்தீவு மன்னார் வைத்தியசாலைகளுக்கான கட்டட வசதிகள் போன்றவற்றை முழுமைபெறச் செய்யமுடியாத நிலைக்கு விட்டுவிட்டு வந்துவிட்டேன்
எனினும் அங்குள்ளவர்கள் நீங்கள் இங்கு இல்லாது விட்டாலும் நாங்கள் இதனை செய்து முடிப்போம் வடக்குமாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனக்கூறியுள்ளார்கள் ஜனாதிபதியின் செயலாளர் கூறிய முக்கிய விடையம் வடக்கு மாகாணம் மட்டுமன்றி எந்த மாகாணத்தில் ஆவது முதல் நிலையில் இருக்கும் வைத்தியசாலையின் தேவைகள் கல்வித் துறையின் குறைபாடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் வேலை வாய்ப்பு மற்றும் விவசாயத் தேவைகளை உடனடியாக செய்து கொடுப்பதற்கான பனிப்புரையை விடுத்துள்ளார்கள். குறித்த வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பதற்கு குறித்த அதிகாரிகளுடன துணையாக இருப்பேன்.
அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் முரண்பட்ட கொள்கைகளுக்க அப்பால் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால் ஒரு ஆளுநராக மட்டுமன்றி இந்த மாவட்டத்தின் மாகாணத்தின் ஒருவராக இருந்து செயற்படுவேன்.
இளவாலை பத்தாவத்தையைச் சேர்ந்த நான் பிறந்து வளர்ந்து பெற்றோரின் தொழில் வாய்ப்பு காரணமாக பல்வேறு இடங்களுக்கும் சென்று யாழ்.பல்கலைகக்ழகத்தில் படித்து நிர்வாக சேவையில் இணைந்து கொண்டேன் ஆனால் எனது சேவைக்காலத்தில் எனது சொந்தமாவட்டத்தில் சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனை நான் கூறிவருவேன் ஆனால் சேவையைமுடித்துக்கொண்டு சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. உங்கள் அத்தனை பேருடனும் இணைந்து எத்தகைய விடையங்கள் செய்வது என்று ஜனாதிபதி செயலகத்துடனும் கலந்துரையாடி அதனை முடித்து வைப்பதற்கு இயலுமான வரை நடவடிக்கைகளை எடுப்பேன்.
உங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் இங்குள்ள மக்களும் அங்குள்ளமக்களுக்கு ஒருஇணைப்புப் பாலமாக நான் செயற்படுவேன் அங்குள்ள அத்தனை உத்தியோகத்தர்களும் வடக்கு மாகாணத்தில் உங்களுடைய கடமைகளைச் செய்வதற்கு எங்களுடை ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள் பெரும்பான்மையின அரச அதிகாரிகள் கவலையுடன் இருக்கின்றார்கள் எப்போது வடக்கு மக்களுக்கு உதவி செய்வோம் என்று அளுத்தங்கள் விமர்சனங்களுக்குஅப்பால் முரண்பாடுகளுக்கு அப்பால் நீங்கள் அனைவரும் என்னுடன் இணைந்து செயற்படுவீர்கள் என உறுதியளித்துள்ளீர்கள் இதைத்தான் நானும் எதிர்பார்க்கின்றேன்
உள்ளங்களில் இருக்கும் அளுத்தங்கள் இறுக்கங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இதய சுத்தியுடனும் திறந்த மனத்துடனும் குறைகள் தவறுகளை நேரில் சுட்டிக்காட்டுபவர்களாக என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன் நான் இங்கு வந்திருப்பது யாரையும் குறை செல்வதற்கு யாரையும் எனக்காக மாற்றிக்கொள்ள விமர்சிப்பதற்கும் அல்ல தள்ளி வைப்பதற்கும் அல்ல உங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு நம்பிக்கை இருக்கவேண்டும் மாகாணத்திற்கு சேவையாற்றத்தான் வந்திருக்கின்றேன்.
பிள்ளைகள் கொழும்பில் படிக்கின்றார்கள் வேலை செய்கின்றார்கள் வயதான தாய் என்னுடன்இருக்கின்றார் இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் நான்இ தனை ஏற்றுக் கொண்டுள்ளேன். என்னுடைய குடும்பத்தில் பல சுகங்களை அவர்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துத்தான் இங்கு வந்துள்ளேன் உங்களது ஆலோசனைகள் அறிவுரைகள் ஆதரவு நிச்சயமாகத்தேவை இந்த மாவட்டத்தை நேசிக்கின்றேன் எனது பெற்றோர் உறவினர் பெற்றோரின் பெற்றோர்கள் உறவினர்கள் இந்த மண்ணுக்காக நிறையபோராடியிருக்கின்றார்கள்
அவர்களின் தியாகங்களுக்கு தலைவணங்கி இந்த மாகாணத்திற்கு என்னால் முடிந்த சேவைகளைச் செய்வேன் இந்த உறவுப் பாலத்தைப் பயன்படுத்தி 30 வருட யுத்த்தில் இழந்தவற்றையும் கடந்தகாலங்களில் அடைந்து கொள்ள முடியாதவற்றை பெற்றுக்கொள்வற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தக் கேட்டுக்கொள்கின்றேன் இதற்காகத்தான் ஜனாதிபதி ஒன்றரை மாத காலத்திற்கு பின்னர் இதனைச் செய்துள்ளார் ஆதரவு எங்களுக்குத் தேவை என்றார்.